பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்99

நாடுகளை அழித்து அந்நாட்டுச் செல்வங்களைத் தன் நாட்டுக்கு கொண்டுவந்தான்.21 இவனால் அழிக்கப்பட்ட கோட்டைகள் எண்ணற்றவை.22 யானைக் காலில் மூங்கில் முளைகள் நசுங்கி அழிவதுபோல் இவனுக்குச் சினமூட்டியவர் நசுக்கப்பட்டனர்.23 இவனது படைகள் அணிவகுத்துச் செல்வது கண்ணுக்கினிய காட்சியாயினும் பகைவர்க்கு அது இன்னாதது.24 இவனது படையில் பலமொழி பேசும் மக்களும் வீரர்களாய் விளங்கினர்.25 அவர்கள் பகைவர்களைக் காஞ்சியாக்கும் (நிலையாமையாக்கும்) பண்பினர்.26 இவன் பாசறையில் தங்கியிருந்தபோது வேந்தர்கள் இரவு பகலாய்த் தூங்காமல் நடுங்கிக் கொண்டிருந்தனர்.27 இவ்வாறு போர் வல்லமை உடையவனாக இவன் திகழ்ந்தான்.

கொடை

இவன் இசைவாணர்களைப் பேணிப் பாதுகாத்து வந்தான்.28 இசைபாடும் பெண்களுக்கு அரிய நல்ல அணிகலன்களை அளித்துச் சிறப்பித்தான்.29 வறுமையில் வாடியவர்களுக்கு அவர்களது துன்பம் நீங்கும் அளவுக்குக் கொடுத்தான்.30 போர் வெற்றியில் கிடைத்த செல்வங்களையெல்லாம் வஞ்சி மூதூருக்குக் கொண்டு வந்து பிறர்க்கு உதவும் வகையில் நல்கினான்.31

பெருங்குன்றூர்கிழார் இவன் போர்ப் பாசறையில் இருந்த போது கண்டு பாடினார்.32 அவரது பாடலைப் போற்றி இளஞ்சேரல் இரும்பொறை 32 ஆயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். பெருங்குன்றூர்கிழாரின் பாடல்திறத்தைக் கண்டு, வியந்து போற்றாதவர்களுக்கு இந்தச் செல்வத்தை அளித்துப் புலவர் பிறரை வியக்கச் செய்ய வேண்டும் என்று கூறி அந்தச் செல்வத்தைக் கொடுத்தான்.33 புலவர் இந்தப் பணத்தைப் பிறருக்குக் கொடுத்தபின்


21. ௸ 83 : 6 - 7

22. ௸ 84 : 7 - 8

23. பதிற். 84 : 11 - 12

24. ௸ 83 : 3 - 6

25. ௸ 90 : 30

26. ௸ 84 : 19

27. ௸ 81 : 35 - 37

28. ‘பாடுநர் புரவலன்’ (பதிற். 86 : 8)

29. ‘பாடினி நன்கலம் பெறுகுவை’

(பதிற். 87 : 1)

30. ‘இல்லோர் புன்கண் தீர நல்கும் (பதிற். 86 :6)

31. பதிற். பதி. 9 : 9

32. பதிற். 82 : 2

33. ‘மருளில் லார்க்கு மருளக்கொடு வென்று’ (பதிற். பதி.9) கொளு