பக்கம் எண் :

 : :

9. யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டை யரசாண்டவன் அவனுடைய தம்பி மகனான இளஞ்சேரல் இரும்பொறை (ஒன்பதாம் பத்தின் தலைவன்). இளஞ்சேரல் இரும் பொறைக்குப் பின் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை யரசாண்டான்.

மாந்தரன் சேரல் என்பது இவனுடைய பெயர். யானையின் கண் போன்ற கண்ணையுடையவன் (புறம். 22:29). ஆகையால் யானைக்கட் சேய் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். ‘வேழ நோக்கின் விறல் வெஞ்செய்’ என்றும் இவன் கூறப்படுகின்றான். வேழம் - யானை; நோக்கு - பார்வை. சேய் - பிள்ளை, மகன். இவனுடைய பாட்டனான செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு மாந்தரஞ் சேரல் என்னும் பெயரும் உண்டு. இவனுக்கும் மாந்தரஞ் சேரல் என்னும் பெயர் உண்டு. ஒரே பெயரைக் கொண்டிருந்த இவ்விருவரையும் பிரித்துக் காட்டுவதற்காக, ‘யானைக்கட்சேய்’ என்னும் அடைமொழி கொடுத்து இவன் கூறப் படுகிறான். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (யா.சே.மா. சே.இ.) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறான். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்கு மக்கட்பேறு இல்லாமலிருந்தும் வேள்வி செய்து ஒரு மகனைப் பெற்றான் என்று அறிந்தோம். அந்த வேள்வியினால் பிறந்த மகன் இவனாக இருக்கலாம் என்று தோன்றுகிறான்.1

யா. சே. மா. சே. இரும்பொறை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சில போர்களைச் செய்தான். அப்போர்களில் இவனுக்கு வெற்றியுந் தோல்வியுங் கிடைத்தன. விளங்கில் என்னும் ஊரில் இவன் பகைவருடன் போர் செய்து வெற்றிபெற்றான். அவ்வமயம், இந்த வெற்றியைப் பாடுவதற்கு இப்போது கபிலர் இல்லையே என்று இவன் மனவருத்தம் அடைந்தான். (இவனுடைய பாட்டனான செல்வக் கடுங்கோ வாழியாதனைக் (மாந்தரஞ் சேரலைக்) கபிலர் ஏழாம் பத்துப் பாடினார்.) தன்னைப் பாடுவதற்கு இப்போது கபிலர் இல்லையே என்று இவன் வருந்தியதைக் கண்டு பொருந்தில் இளங் கீரனார், கபிலரைப் போலவே நான் உன்னைப் பாடுவேன் என்று கூறினார்.