பக்கம் எண் :

106மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

“செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த வேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவல் மன்னால் பகைவரைக் கடப்பே”(புறம். 53: 11-15)

புலவர் இளங்கீரனார் இவ்வாறு கூறிய பிறகு இவன் மேல் ஒரு பத்துச் செய்யுட்களைப் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் பத்து, பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்தாக இருக்கவேண்டும். பத்தாம்பத்து இப்போது கிடைக்கவில்லை. அது மறைந்து போயிற்று.

யா. சே. மா. சே. இரும்பொறைக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர் நடந்தது. அந்தப் போர் எந்த இடத்தில் நடந்ததென்று தெரியவில்லை. அந்தப் போரில் இவன் வெற்றி யடைவது திண்ணம் என்று இவன் உறுதியாக நம்பினான். ஆனால், இவனுக்குத் தோல்வி ஏற்பட்டது. சோழன் வென்றான். சோழனுடைய வெற்றிக்கும் இவனுடைய தோல்விக்கும் காரணமாக இருந்தவன் மலையமான் அரசனாகிய தேர்வண்மலையன் என்பவன். போர் நடந்த போது தேர்வண்மலையன் சோழனுக்கு உதவியாக வந்து இவனைத் தோல்வியுறச் செய்தான். இந்தச் செய்தியைப் புறநானூறு 125ஆம் செய்யுளினால் அறிகிறோம். இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “சேர மான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனைப் பாடியது” என்று கூறுகிறது. (பொருதவழி - போர் செய்தபோது; துப்பு - பலம்.)

இவன் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். அந்தப் பாண்டியனுடன் யா.சே.மா.சே. இரும்பொறை போர் செய்தான். போர் எந்த இடத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, அந்தப் போரில் இவன் தோற்றது மட்டுமல்லாமல் பாண்டியனால் சிறைப் பிடிக்கப் பட்டுச் சிறையில் வைக்கப்பட்டான். ஆனால், எவ்விதமாகவோ சிறையிலிருந்து தப்பி வெளிவந்து தன்னுடைய நாட்டை யரசாண்டான். இந்தச் செய்தியைக் குறுங்கோழியூர் கிழார் இவனைப் பாடிய செய்யுளி லிருந்து அறிகிறோம் (புறம். 17). அந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதிற்