பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு107

போய்க் கட்டி வெய்தினானைப் பாடியது” என்று கூறுகிறது. (பிணி யிருந்த - கட்டப்பட்டிருந்த, சிறைப் பட்டிருந்த. கட்டில் எய்தினானை -சிம்மாசனம் ஏறியவனை; கட்டில் -சிம்மாசனம்.)

கருவூர்ப் போர்

யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் தோல்வியடைந்ததை யறிந்தோம். இவன் காலத்தில் சோழ நாட்டைச் சில சோழ அரசர்கள் அரசாண்டு வந்தனர். அவர்களில், உறையூரிலிருந்து அரசாண்ட கிள்ளி வளவனும் ஒருவன். இந்தக் கிள்ளிவளவனைப் பிற்காலத்தவர் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்றுங் கூறுவர். குளமுற்றம் குராப்பள்ளி என்னும் இரண்டு இடங்களில் இவன் இறந்துபோனான் என்பது இதன் பொருள் அன்று. குளமுற்றம், குராப்பள்ளி இரண்டும் ஒரே இடத்தைக் குறிக் கின்றன. குராப்பள்ளியில் இறந்த கிள்ளிவளவன் வேறு, குளமுற்றத்தில் இறந்து போன கிள்ளிவளவன் வேறு என்று கருதவேண்டா. இரு பெயரும் ஒருவரையே குறிக்கின்றன.2

இந்தக் கிள்ளிவளவன் கருவூரை (கொங்கு நாட்டுக் கருவூரை) முற்றுகையிட்டான். அப்போது கருவூர்க் கோட்டைக்குள் இருந்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இரும்பொறை, வெளியே வந்து கிள்ளிவளவனுடன் போர் செய்யாமல் கோட்டைக் குள்ளேயே இருந்தான். அப்போது ஆலத்தூர்கிழார் என்னும் புலவர் சோழனிடம் வந்து, ‘போருக்கு வராமல் இருக்கிறவனுடன் நீ போர் செய்து முற்றுகை இடுவது தகுதியன்று’ என்று கூறினார்.3 கிள்ளி வளவன் புலவர் சொல்லை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து முற்றுகை செய்தான். மாந்தரஞ் சேரல், போருக்கு வராமலிருந்த காரணம், தனக்கு வெளியிலிருந்து வரவேண்டிய அரசரின் உதவியை எதிர்பார்த் திருந்ததுதான். இவன் எதிர்பார்த்திருந்த உதவி கிடைத்தபிறகு இவன் கிள்ளிவளவனுடன் போர்செய்தான். போரின் முடிவு அவனுக்குத் தோல்வியாக இருந்தது. சோழன் கிள்ளிவளவனே வென்றான்.

போரில் கருவூர்க் கோட்டையைக் கிள்ளிவளவன் தீயிட்டுக் கொளுத்தினான். மாடமாளிகைகள் எரிந்து விழுந்தன.4

சோழன், கொங்கு நாட்டின் தலைநகரை வென்றபடியால் கொங்குநாடு முழுவதையுமே வென்றான் என்பது பொருளன்று.