பக்கம் எண் :

108மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

கோவூர்க்கிழார் கிள்ளிவளவனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடினார் (“கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே” என்றும், “வஞ்சி முற்றம் வயக்களனாக, அஞ்சாமறவர் ஆட்போர் பழித்துக் கொண்டனை பெரும குடபுலத்திதரி” என்றுங் கூறுகிறார் - புறம் 373). வஞ்சி - கருவூர், குடபுலம் - கொங்கு நாடு. இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரெறிந்தானைப் பாடியது” என்று கூறுகிறது. மாறோக்கத்து நப்பசலையாரும் சோழனுடைய கருவூர் வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.5

கிள்ளிவளவன் கருவூரை வென்றபோதிலும் அதை அவன் ஆட்சி செய்யவில்லை. யா.க.சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறை அதை மீட்டுக் கொண்டிருக்க வேண்டும். கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூரை முற்றுகை செய்திருந்த காலத்தில் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரநாட்டு முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த படிமம் (தெய்வ உருவம்) ஒன்றை எடுத்துக் கொண்டு போனான் என்பது தெரிகின்றது. கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டபோது, யா. க. சே. மாந்தரஞ்சேரல் இரும் பொறைக்கு உதவி செய்யச் சேரன் தன்னுடைய சேனைகளைக் கொங்கு நாட்டுக்கு அனுப்பியிருக்கக் கூடும். அந்தச் சமயத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் முசிறியை முற்றுகையிட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பாண்டியன் முசிறியை முற்றுகையிட்டு அங்கிருந்து படிமத்தைக் கொண்டுபோன செய்தியைத் தாயங் கண்ணனாரின் செய்யுளிலிருந்து அறிகிறோம்.6 இந்தப் பாண்டியனின் காலத்தவரான நக்கீரரும் இவனுடைய முசிறிப் போரைக் கூறுகிறார்.7

பாண்டியன் முசிறியிலிருந்து கொண்டுபோன படிமம், சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகியின் பத்தினிப் படிவமாக இருக்கக் கூடும் என்று எளங்குளம் குஞ்சன் பிள்ளை தாம் மலையாள மொழியில் எழுதிய கேரளம் அஞ்சும் ஆறும் நூற்றாண்டுகளில் என்னும் நூலில் எழுதுகிறார். அது கண்ணகியின் படிமமாக இருக்க முடியாது; வேறு ஏதோ படிமமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. குஞ்சன் பிள்ளையின் கருத்தை இந்துசூடன் அவர்களும் மறுத்துக் கூறுகிறார்.8

குளமுற்றத்துத் (குராப்பள்ளித்) துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கு நாட்டின் தலைநகரத்தை முற்றுகையிட்டு வென்றதும், தலையாலங்