பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 109 |
கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரநாட்டு முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு வென்றதும் ஆகிய நிகழ்ச்சிகள், அக் காலத்தில் சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் சேர அரசர்கள் வலிமை குறைந்து இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. சேரன் செங் குட்டுவன் காலத்துக்குப் பிறகு சேர அரசர்கள் பலமில்லாதவர்களாக இருந்தார்கள் என்பது தெரிகின்றது. யா. க. சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பு கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறை, சோழநாட்டு இளஞ் சேட் சென்னியை வென்றான் என்றும் சதுக்கப்பூதர் என்னும் தெய்வங்களைத் தன்னுடைய தலைநகரத்தில் கொண்டுவந்து அமைத்தான் என்றும் அறிந்தோம். அந்தப் பூதங்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த பேர்போன பூதங்களாக (தெய்வங்களாக) இருக்கக் கூடும். அந்தத் தெய்வ உருவங்களை இளஞ்சேரல் இரும்பொறை அங்கிருந்து கொண்டுவந்து தன் நாட்டில் அமைத்துத் திருவிழாச் செய்தான். அந்தப் பகையை ஈடுசெய்வதற்காகவே குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூரின் மேல் படை யெடுத்துச் சென்றான் என்று கருதத் தோன்றுகிறது. கிள்ளிவளவன் தன் போர் முயற்சியில் வெற்றியைக் கண்டான். சேர நாட்டின் மேற்குக் கடற்கரையில் இருந்த பேர்போன தொண்டித் துறைமுகப்பட்டினம் இவன் காலத்திலும் கொங்குச் சோழரின் துறை முகமாக இருந்தது. தொண்டிப் பட்டினத்தின் கடற்கரையில் கழிகளும் தென்னை மரங்களும் வயல்களும் மலைகளும் இருந்தன. “கலையிறைஞ்சிய கோட்டாழை அகல்வயல் மலைவேலி நிலவுமணல் வியன்கானல் தெண்கழிமிசை தீப்பூவின் தண்தொண்டியோர் அடுபொருந” (புறம். 7: 19-13) (தாழை - தென்னை) இவன் நீதியாகச் செங்கோல் செலுத்தினான். ‘அறந்துஞ்சும் செங்கோலையே’ (புறம். 20:17). தேவர் உலகம் போல இவனுடைய நாடு இருந்தது. ‘புத்தேளுலகத்தற்று’ (புறம். 22 : 35). இவனுடைய ஆட்சியில் மக்களுக்கு அமைதியும் இன்பமும் இருந்தது. |