110 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
குறுங்கோழியூர்கிழார் இவ்வரசனைப் பாடியுள்ளார் (புறம். 17 :20, 22). பொருந்தில் இளங்கீரனார் இவனைப் பாடினார் (புறம். 53) இப் புலவரே இவன்மீது பத்தாம் பத்தைப் பாடியிருக்க வேண்டும் என்பதை முன்னமே கூறினோம். புலத்துறை முற்றிய கூடலூர்கிழாரை இந்த அரசன் ஆதரித்தான். இவரைக் கொண்டு இவன் ஐங்குறுநூறு என்னும் தொகைநூலைத் தொகுப்பித்தான். (“இத்தொகை தொகுத்தார், புலத் துறை முற்றிய கூடலூர்கிழார்; இத்தொகை தொகுப்பித்தார் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையார்” என்று ஐங்குறுநூற்றின் இறுதியில் எழுதப்பட்டிருக்கிறது.) யா.சே.மா.சே. இரும்பொறை எத்தனை யாண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் வானநூல் அறிந்தவர். ஒருநாள் இரவு வானத்தில் விண்மீன் ஒன்று சுடர்விட்டு எரிந்து விழுந்ததை அவர் கண்டார். அப்போது அவர் வான நூலைக் கணித்துப் பார்த்து யா.சே.மா.சே. இரும்பொறை ஏழாம் நாள் இறந்து விடுவான் என்று அறிந்தார். வானத்தில் விண்மீன் எறிந்து விழுந்தால் அரசன் இறந்து விடுவான் என்பது வானநூலார் நம்பிக்கை. புலவர் கணித்துக் கூறியபடியே ஏழாம் நாள் இவ்வரசன் இறந்து போனான். அப்போது அப்புலவர் இவன்மீது ‘ஆனந்தப் பையுள்’ பாடினார் (புறம் 229). இச்செய்யுளின் அடிக்குறிப்பு “கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துப் பாடியது” என்று கூறுகிறது (துஞ்சுதல் -இறந்துபோதல்). யா.சே. மா.சே. இரும்பொறை ஏறாத்தாழ கி. பி. 170 முதல் 190 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். யா.சே. மா.சே. இரும்பொறையின் காலத்தில் சோழநாட்டையர சாண்டவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டிநாட்டை யரசாண்டவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன், சேர நாட்டை யரசாண்டவன் செங்குட்டுவனின் மகனான குட்டு வஞ்சேரல் (கோக்கோதை மார்பன்). இவர்கள் சேரன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு (கி.பி. 180க்குப் பிறகு) அரசாண்டார்கள். |