பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு125

இரும்பொறை அரசர்களின் கால நிர்ணயம்

இனி, கொங்கு நாட்டைக் கடைச்சங்க காலத்தில் அரசாண்ட சேர மன்னர்களின் காலத்தை நிர்ணயிக்கவேண்டியது கடமையாகும். (காலத்தைக் கூறாத சரித்திரம் சரித்திரம் ஆகாது.) இந்த அரசர்களில் மூன்றுபேர் (7, 8, 9ஆம் பத்து) ஒவ்வொருவரும் இத்தனையாண்டு அர சாண்டனர் என்பதைப் பதிற்றுப்பத்துப் பதிகக் குறிப்புகள் கூறுகின்றன. 7ஆம் பத்தின் தலைவனான செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டும், இவன் மகன் 8ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17ஆண்டும், இவனுடைய தம்பி மகன் 9ஆம் பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டும் அரசாண்டனர் என்று அந்தக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், இவர்களுக்கு முன்னும்பின்னும் அரசாண்டவர் ஒவ்வொருவரும் எத்தனை யாண்டு அரசாண்டனர் என்பது தெரியவில்லை. கிடைத்துள்ள குறிப்பு களைக் கொண்டு இவர்களின் காலத்தை ஒருவாறு நிர்ணயிக்கலாம்.

இந்தக்கால நிர்ணயத்திற்கு அடிப்படையான கருவியாக இருப்பது செங்குட்டுவன் - கஜபாகு சமகாலம் ஆகும். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை யரசனான கஜபாகுவும் (முதலாம் கஜபாகு) ஒருவன். முதலாம் கஜபாகு இலங்கையை கி.பி. 171 முதல் 191 வரையில் அரசாண்டான் என்று மகா வம்சம், தீபவம்சம் என்னும் நூல்களினால் அறிகிறோம். சரித்திரப் பேராசிரியர்கள் எல்லோரும் இந்தக் கால நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். (கஜபாகு, செங்குட்டுவனைவிட வயதில் இளையவன்). செங்குட்டுவன் பத்தினிக் கோட்ட விழாச் செய்தபோது அவனுடைய ஆட்சியாண்டு ஐம்பது. அவன் ஆட்சிக்கு வந்தபோது (இளவரசு ஏற்றபோது) அவன் இருபது வயதுடையவனாக இருந்தான் என்று கொள்வோமானால், அவனுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டில் அவனுக்கு வயது எழுபது இருக்கும். செங்குட்டுவன் தன்னுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டில் (அதாவது தன்னுடைய 70ஆம் வயதில்) கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து விழாக் கொண்டாடினான்.

“வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை.”

(சிலம்பு, நடுகல்.129 - 132)