| 126 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
கஜபாகு வேந்தன் தன்னுடைய எத்தனையாவது ஆட்சியாண்டில் பத்தினிக் கோட்டத்துக்கு வந்தான் என்பது தெரியவில்லை. அவனுடைய ஆட்சிக்காலத்தின் இடைப்பகுதியில் உத்தேசமாகக் கி.பி. 180இல் கஜபாகு பத்தினிக் கோட்டத்துக்கு வந்தான் என்றுகொள்ளலாம். அப்போது செங்குட்டுவனின் ஆட்சியாண்டு ஐம்பது. அவன் 55 ஆண்டு ஆட்சி செய்தான் என்று பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. ஆகவே, அவன் உத்தேசம் கி.பி. 185ஆம் ஆண்டில் கால மானான் என்று கருதலாம். அதாவது, சேரன் செங்குட்டுவன் உத்தேசமாக கி.பி. 130 முதல் 185 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்தை உத்தேசமாக நிர்ணயித்துக் கொண்டபடியால், இதிலிருந்து கொங்கு நாட்டுச் சேரஅரசர் அரசாண்ட காலத்தை (ஏறத்தாழ) எளிதில் நிர்ணயித்துக் கொள்ள முடியும். இதற்குச் சிலப்பதிகாரக் காவியம் நமக்கு மீண்டும் உதவி செய்கிறது. 9ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டைப் பதினாறு யாண்டு அரசாண்டான் என்று பதிகக் குறிப்புக் கூறுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை, சேரன் செங்குட்டுவனின் தாயாதிச் சகோதரனுடைய மகன் என்பதை அறிவோம். செங்குட்டுவன் சேர நாட்டை யரசாண்ட காலத்தில் இளஞ்சேர லிரும் பொறை கொங்கு நாட்டை யரசாண்டான். ஆனால், செங்குட்டுவ னுடைய ஆட்சிக் காலத்திலேயே, அவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்ட விழாச் செய்வதற்கு முன்னமேயே, இவன் இறந்து போனான். அதாவது, செங்குட்டுவனுடைய 50ஆவது ஆட்சி யாண்டுக்கு முன்பே, (செங்குட்டுவனுடைய 70ஆவது வயதுக்கு முன்னமே, உத்தேசம் கி.பி. 180க்கு முன்னமே) இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான். இதைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். “சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும் மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின் யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்” (சிலம்பு, நடுகல் 147-150) சதுக்கப்பூதர் என்னும் தெய்வங்களை வஞ்சியில் (கொங்கு நாட்டுக் கருவூர் வஞ்சியில்) அமைத்தவன் இளஞ்சேரல் இரும்பொறை யாவன். இதை இவனைப் பாடிய 9ஆம் பத்துப்பதிகமுங் கூறுகிறது. |