பக்கம் எண் :

130மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

பெருஞ்சேரல் இரும்பொறையின் மறவன் (சேனைத் தலைவன்) பிட்டங்கொற்றன் (புறம். 172:8-10; அகம். 77:15-16, 143:10-12). அரசன் பகையரசர்மேல் போருக்குச் சென்றால், அவன் கீழடங்கிய சிற்றரசர்கள் தங்களுடைய சேனைகளை அழைத்துக் கொண்டு அவனுக்கு உதவியாகச் சென்றனர்.

குடிமக்களிடமிருந்து இறை(வரி) தண்டுவதற்குச் சிலர் நியமிக்கப் பட்டிருந்தார்கள். கொங்குநாட்டில் வரி வசூல் செய்தவர் கோசர் என்பவர். அவர்கள் கண்டிப்புள்ளவர். அவர்கள் ஊர்ஊராகப் போய்ப் பொது அம்பலத்தில் (ஆலமரம், அரச மரங்களின் கீழே) தங்கிச் சங்குகளை முழங்கியும் பறையடித்தும் தாங்கள் இறை வசூல் செய்ய வந்திருப்பதைத் தெரிவித்தார்கள். பிறகு, ஊராரிடத்தில் இறைத் தொகையை வசூல் செய்துகொண்டு போய் அரசனிடங் கொடுத்தார்கள். இந்தச் செய்தியைக் கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த ஒளவையார் கூறுகிறார்.3

இரும்பொறையரசர்களின் ஆட்சிமுறை பற்றி அதிகமாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆட்சி சேர சோழ பாண்டியரின் ஆட்சியைப் போலவே இருந்தது என்பதில் ஐயமில்லை.

அடிக்குறிப்புகள்

1.(முழுதுணர்ந்து ஒழுகும் நரைமூதாளனை உண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கென, வேறுபடு நனந்தலைப் பெயரக்,கூறினை பெருமநின் படிமையானே), (8ஆம் பத்து 4: 24-28)

2.*(`மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசுமயக்கி’ (9ஆம் பத்து பதிகம் அடி 11-12) புரோசு - புரோகிதன்.

3.(“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறை கொள்பு, தொன் மூதாலத்துக் பொதியிற் றோன்றிய, நாலூர்க் கோசர் நன்மொழிபோல, வாயாகின்றே.” (குறும் - 15: 1-4)