பக்கம் எண் :

 : :

13. இரும்பொறை அரசரின் ஆட்சி முறை

தமிழ்நாட்டில் மட்டுமன்று, பாரத நாடு முழுவதிலும் அந்தப் பழங் காலத்தில் அரசர்கள் ஆட்சி செய்வதற்குத் துணையாக ஐம்பெருங் குழுவினர் இருந்தார்கள். ஐம்பெருங்குழு என்பது அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், தூதுவர், சாரணர் என்பவர்கள். ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர் சிலர் இருந்தார்கள், புரோகிதர் என்பவர் மதச் சார்பான காரியங்களைக் கவனித்தனர். அக்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்று நான்கு வகையான சேனைகள் அரசர்களுக்கு இருந்தன. கொங்கு நாட்டு அரசருக்குச் சிறப்பாக யானைப்படை இருந்தது. ஒவ்வொரு படைக்கும் ஒவ்வொரு தலைவனும், அவர்களுக்குத் தலைவனாக சேனாதிபதியும் இருந்தனர். தூதுவர்கள் அரசன் கட்டளைப்படி அரச காரியங்களை வேற்றரசரிடஞ் சென்று காரியங்களை முடித்தார்கள். ஒற்றர்கள் மாறு வேடம் பூண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் அரசியல் இரகசியங்களைத் தெரிந்துவந்து அரசனுக்குக் கூறினார்கள். தமிழ் நாட்டு அரசர்களிடத்திலும் இவ்வாறு ஐம்பெருங்குழுக்கள் இருந்து அரசாட்சி செய்தன. கொங்கு நாட்டிலும் ஐம்பெருங் குழுவைக் கொண்டு அரசாட்சி நடந்தது. ஆனால், கொங்கு நாட்டு ஐம்பெருங் குழுவைப் பற்றிஅதிகமாகத் தெரியவில்லை.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சர் அரிசில் கிழார் என்னும் புலவர். சிறந்த புலவராக இருந்த இவர் இவ்வரசன்மேல் 8ஆம் பத்துப் பாடினார். இச்செய்திகளை 8ஆம் பத்துப் பதிகத்தினாலும் அதன் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம். இப்புலவரின் செய்யுட்கள் சில தகடூர் யாத்திரை என்னும் நூலில் காணப்படுகின்றன.

இளஞ்சேரல் இரும்பொறைக்கு அமைச்சராக இருந்தவர் மையூர் கிழான் என்பவர். இவர். இவ்வரசனுடைய தாய்மாமன் ஆவர்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய வயது சென்ற அரண்மனைப் புரோகிதனைத் தவஞ்செய்யக் காட்டுக்கு அனுப்பினான்.1 இளஞ்சேரலிரும்பொறை தன்னுடைய அமைச்சனான மையூர்கிழானைத் தன்னுடைய புரோகிதனைக் காட்டிலும் அறநெறி யுடையவனாகச் செய்தான்.2