15. பயிர்த் தொழில், கைத்தொழில், வாணிபம் மற்றத் தமிழ் நாடுகளில் இருந்தது போலவே கொங்கு நாட்டிலும் பலவகையான தொழில்கள் நடந்து வந்தன. கொங்கு நாடு கடற்கரை இல்லாத உள்நாடு. ஆகையால், கடல்படு பொருள்களாகிய உப்பும் உப்பிட்டு உலர்த்திய மீன்களும் சங்குகளும் நெய்தல் நிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. அவை மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைப் பக்கங்களிலிருந்து கொண்டு வரப்பட்டன. உமணர் (உப்பு வாணிகர்) உப்பு மூட்டைகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு உள் நாடுகளில் வந்து விற்றனர். கொங்குநாட்டில் வாழ்ந்தவரான ஒளவையாரும் இதைக் கூறுகிறார் (‘உமணர் ஒழுகைத்தோடு’ - குறுந். 388: 4). உப்பு வண்டி மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி ஓசை காட்டுவழிகளில் ஒலித்தது.1 உப்பு வண்டிகளில் பாரம் அதிகமாக இருந்தபடியால், சில சமயங்களில் வண்டிகள் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கும் போது அச்சு முறிந்துவிடுவதும் உண்டு. அதற்காக அவர்கள் சேம அச்சுகளை வைத்திருந்தார்கள்.2 கடற்கரைப் பக்கங்களில் சங்கு கிடைக்கும் இடங்களில் கடலில் முழுகிச் சங்குகளைக் கொண்டு வந்து வளையல்களாக அறுத்து விற்றனர். அக்காலத்தில் தமிழ்நாட்டு மகளிர் எல்லோரும் சங்கு வளைகளைக் கையில் அணிந்திருந்தனர். சங்கு வளைகளை அணிவது நாகரிகமாகவும் பண்பாடாகவும் மங்கலமாகவும் கருதப் பட்டது. குடில்களில் வாழ்ந்த ஏழைப் பெண்கள் முதலாக அரண்மனை களில் வாழ்ந்த அரசியர் வரையில் எல்லாப் பெண்களும் சங்கு வளையல்களை அணிந்திருந்தார்கள். செல்வச் சீமாட்டிகளும் அரசிகளும் பொன்வளையல்களை அணிந்திருந்ததோடு சங்கு வளையல்களையும் கட்டாயமாக அணிந்திருந்தனர். செல்வம் படைத்தவர்கள் வலம்புரிச் சங்குகளை அணிந்தார்கள். சாதாரண மகளிர் இடம்புரிச்சங்கு வளையல்களை அணிந்தார்கள். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசி, |