பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 143 |
கப்பலைச் செலுத்தி விரைவாக முசிறித் துறைமுகத்துக்கு வந்தான். அந்தப் பருவக்காற்றுக்கு யவன மாலுமிகள், அதைக் கண்டுபிடித்தவன் பெயரையே வைத்து ஹிப்பலஸ் என்று பெயர் சூட்டினார்கள். இதன் பிறகு, யவனக் கப்பல்கள் அரபிக்கடலின் ஊடே முசிறி முதலிய துறை முகங்களுக்கு விரைவாக வந்து போயின. இதனால் அவர்களுக்கு நாற்பது நாட்கள் மிச்சமாயின. தொடக்கக் காலத்தில் யவனர் செங்கடலுக்கு வந்து வாணிகஞ் செய்தபோது அந்தக் கடலுக்கு எரித்திரைக் கடல் என்று பெயர் கூறினார்கள். எரித்திரைக் கடல் என்றால் செங்கடல் என்பது பொருள். பிறகு, அவர்கள் செங்கடலுக்கு இப்பால் பாரசீகக் குடாக்கடலுக்கு வந்த போது, இந்தக் கடலுக்கும் எரித்திரைக் கடல் என்று அதே பெயரிட்டார் கள். பிறகு, அரபிக் கடலில் வந்து வாணிகஞ்செய்தபோது அரபிக் கடலுக்கும் அப்பெயரையே சூட்டினார்கள். பின்னர் இந்து சமுத்திரம், வங்காளக்குடாக் கடல்களில் வந்து வாணிகஞ் செய்தபோது இந்த கடல்களுக்கும் எரித்திரைக் கடல் என்றே பெயரிட்டார்கள். இந்தக் கடல்களில் எல்லாம் வந்து எந்தெந்தத் துறைமுகப் பட்டினங்களில் யவனர் வாணிகஞ் செய்தார்கள், என்னென்ன பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தார்கள் என்பதைக் குறித்து யவன நாட்டார் ஒருவர் கி.பி. 89ஆம் ஆண்டில், பழைய கிரேக்க மொழியில் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரை (The Periplus Maris Erythrai) என்பது. அகஸ்தஸ் சக்கரவர்த்தி யவன - தமிழக வாணிகத்தைப் பெருக்கினான். தமிழ்நாட்டு மிளகும் முத்தும் இரத்தினக் கற்களும் யானைத் தந்தங்களும் யவன நாட்டுக்கு ஏற்றுமதி யாயின. மிளகு பெரிய அளவில் ஏற்றுமதியாயிற்று. அதற்காக அகஸ்தஸ் சக்கரவர்த்தி பெரிய மரக்கலங்களைக் கட்டினான். மேலும், மிளகு முதலிய பொருள்களை வாங்குவதற்குப் பொன் நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் அனுப்பினான். இவ்வாறு, கி.பி. முதல் நூற்றாண்டில் யவன - தமிழகக் கடல் வாணிகம் சிறப்பாக நடக்கத் தொடங்கிற்று. தமிழகத்தில் வந்த யவனர்கள் ஏற்றுமதி செய்து கொண்டு போன பொருள்களில் முக்கியமானது மிளகு. இதற்காகவே முக்கியமாகப் பெரிய கப்பல்கள் கட்டப்பட்டன என்றும், பொற்காசுகளும் வெள்ளிக் காசுகளும் அனுப்பப்பட்டன என்றும் உரோம நாட்டுச் சரித்திரத்தி |