142 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
தங்களுக்குக் கிடைத்த பெரிய ஊதியம் கிடைக்காமற் போய்விடும் என்று அராபியர் அறிந்தபடியால், யவனர்களை இந்தியாவுக்கு வராத படித் தடுத்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் கப்பல்கள் நடுக்கடலில் பிரயாணஞ் செய்யாமல் கடற்கரை யோரமாகவே பிரயாணஞ் செய்தன. அவ்வாறு வந்த யவனக் கப்பல்களை அராபியர் கடற்கொள்ளைக் காரரை ஏவிக் கொள்ளையடித்தனர். அதனால், யவனக் கப்பல்கள் இந்தியாவுக்கு வருவது தடைப்பட்டது. அராபியர் மட்டும் இந்தக் கப்பல் வாணிகத்தை ஏகபோகமாக நடத்திப் பெரிய இலாபம் பெற்றார்கள். அவர்கள் சேர நாட்டில் உலகப் புகழ் பெற்றிருந்த முசிறித் துறைமுகப்பட்டினத்தின் ஒரு பகுதியில் தங்கி வாணிகஞ் செய்தார்கள். முசிறியில் அவர்கள் இருந்து வாணிகஞ் செய்த இடம் பந்தர் என்று பெயர் பெற்றிருந்தது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். அதன் பொருள் அங்காடி, பண்டசாலை, துறைமுகம் என்று பொருள். சென்னை மாநகரில் ‘பந்தர் தெரு’ என்னும் பெயருள்ள ஒரு கடைத் தெரு இருக்கிறது. இங்கு முன்பு முஸ்லீம்கள் அதிகமாக வாணிகஞ் செய்திருந்தார்கள். அதனால் அந்தந் தெருவுக்கு இப்பெயர் ஏற்பட்டது. முசிறித் துறைமுகத்தில் அராபியர் பந்தர் என்னும் இடத்தில் வாணிகஞ் செய்திருந்ததைப் பதிற்றுப்பத்துச் செய்யுளினால் அறிகிறோம்.2 உரோமபுரி சாம்ராச்சியத்தை யரசாண்ட அகஸ்தஸ் (Augustus) சக்கரவர்த்தி காலத்தில் யவன வாணிகர் நேரடியாகத் தமிழ்நாட்டுக்கு வரத்தொடங்கினார்கள். அகஸ்தஸ் சக்கரவர்த்தி கி.மு. 29 முதல் கி.பி. 14 வரையில் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் அலக்சாந்திரியம் உட்பட எகிப்து தேசமும் மேற்கு ஆசியாவில் சில நாடுகளும் உரோம சாம்ராச்சியத்தின் கீழடங்கின. அரபு நாட்டின் மேற்குக் கரையில் இருந்த (செங்கடலின் கிழக்குக் கரையிருந்த) அரபுத் துறைமுகங்களை இந்தச் சக்கரவர்த்தி தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தான். பிறகு யவனக் கப்பல்கள் இந்திய தேசத்தின் மேற்குக் கடற் கரைப் பட்டினங்களுக்கு நேரடியாக வந்து வாணிகஞ் செய்யத் தலைப் பட்டன. இவ்வாறு கிரேக்க, உரோமர்களின் வாணிகத் தொடர்பு கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது. அப்பொழுது யவனக் கப்பல்கள் நடுக்கடலின் வழியாக வராமல் கடற்கரையின் ஓரமாகவே பிரயாணஞ் செய்தன. கரையோரமாக வருவதனால் மாதக் கணக்கில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், ஏறத்தாழ கி.பி. 47இல் ஹிப்பலஸ் என்னும் கிரேக்க மாலுமி, பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடலின் ஊடே |