பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு141

தொடர்புகொண்ட வரலாற்றையறிந்து கொள்வது முக்கியமாகும். கிரேக்க நாட்டாரும் உரோம நாட்டாருமாகிய யவனர்கள் வருவதற்கு முன்னே, அதாவது கிருஸ்து சகாப்தத்துக்கு முன்னே, அரபிநாட்டு அராபியர் தமிழ்நாட்டுடனும் வட இந்திய நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் முக்கியமாக இந்தியத் தேசத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுக்குத் தங்களுடைய சிறிய படகுகளில் வந்து வாணிகஞ் செய்தார்கள்.

அந்தக் காலத்தில் தெரிந்திருந்த உலகம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே. ஆப்பிரிக்கா கண்டத்தில் எகிப்து தேசமும் சில கிழக்குப் பகுதி நாடுகளும் தெரிந்திருந்தன. ஆப்பிரிக்காவின் தெற்கு மேற்குப் பகுதி நாடுகள் உலகம் அறியாத இருண்ட கண்டமாகவே இருந்து வந்தன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டமாகிய மேற்குத் தேசங்களையும் ஆசியாக் கண்டமாகிய கிழக்குத் தேசங்களையும் தொடர்புபடுத்தியது எகிப்து நாட்டு அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினம். அலக் சாந்திரியம், கிழக்கு நாடுகளையும் மேற்கு நாடுகளையும் இணைத்து நடுநாயகமாக விளங்கிற்று. பல நாட்டு வாணிகரும் அந்தத் துறை முகத்துக்கு வந்தார்கள். எல்லா நாட்டு வாணிகப் பொருள்களும் அங்கு வந்து குவிந்தன. நீலநதி மத்திய தரைக் கடலில் கலக்கிற புகர் முகத்துக்கு அருகில், அக்காலத்து உலகத்தின் நடுமத்தியில், அலக் சாந்திரியம் அமைந்திருந்தது. அங்குக் கிரேக்கர், உரோம நாட்டார், பாபிலோனியர், பாரசீகர், அராபியர், இந்தியர், சீனர் முதலான பல நாட்டு மக்களும் வாணிகத்தின் பொருட்டு வந்தனர்.

பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பட்டினங்களிலிருந்து இந்திய வாணிகர் அலக்சாந்திரியம் சென்றனர். ஆனால், காலஞ் செல்லச்செல்ல அராபியர் இந்திய நாட்டுப் பொருள்களைத் தாங்களே வாங்கிக் கொண்டுபோய் அலக்சாந்திரியத்தில் விற்றார்கள். இதற்குக் காரணம் அலக்சாந்திரியத்துக்கும் பாரத நாட்டுக்கும் இடைமத்தியில் அரபுநாடு இருந்ததுதான். இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் இருந்த அரபுநாட்டு அராபியர் கப்பல் வாணிகத்தைத் தங்கள் கையில் பிடித்துக்கொண்டார்கள். மேலும் கிரேக்க, உரோம நாட்டு யவன வாணிகர் இந்திய நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வராதபடியும் அவர்கள் செய்துவிட்டார்கள். கிரேக்க, உரோம நாட்டு யவனர்கள் இந்திய நாட்டுடன் நேரடியாக வாணிகத் தொடர்பு கொண்டால்