பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 147 |
உரோமச் சக்கரவர்த்திகளின் தலையுருவம் பொறிக்கப்பட்டவை. சில காசுகளில் அவ்வரசர்களின் மனைவியரின் உருவம் பொறிக்கப் பட்டிருக்கின்றன. கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதி வரையில் உரோம சாம்ராச்சியத்தை யரசாண்ட அரசர்களின் உருவங்களும் முத்திரைகளும் இக்காசுகளில் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலம் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கடைச்சங்க காலத்தின் இறுதியாகும். இந்தக் காசுகள், அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கும் உரோமாபுரி நாட்டுக்கும் நடந்த வாணிகத் தொடர்பை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்டுகின்றன. கிடைத்துள்ள இந்தக் காசுகளிலே கீழ்க்கண்ட உரோமச் சக்கரவர்த்திகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை: துருஸஸ் (Drusus the Elder - கி.மு. 38 முதல் கி.பி. 9 வரையில் அரசாண்டான்), அகஸ்தஸ் (கி.மு. 29 முதல் கி.பி. 14 வரையில் அரசாண்டான்), தைபிரியஸ் (கி.பி. 14 முதல் 37 வரையில் அரசாண்டான்), கெலிகுலா (கி.பி. 37 முதல் 41 வரையில் அரசாண்டான்), கிளாடியஸ் (கி.பி. 41 முதல் 54 வரையில் அரசாண்டான்), நீரோ (கி.பி. 54 முதல் 68 வரையில் அரசாண்டான்) டொமிஷியன் (கி.பி. 81 முதல் 96 வரையில்), நெர்வா (கி.பி. 96 முதல் 98 வரையில்), திராஜன் (98 முதல் 117), ஹேத்திரியன் (117 முதல் 138 வரையில்), கம்மோடியஸ் (180 முதல் 193 வரையில்). மற்றும், துருஸஸின் மனைவியான அந்தோனியாவின் முத்திரை பொறிக்கப்பட்டதும், ஜர்மனிகஸின் மனைவியான அக்ரிப் பைனாவின் உருவ முத்திரை பொறிக்கப்பட்டதுமான காசுகளும் கிடைத்திருக்கின்றன.7 தமிழ்நாட்டுக்கு வந்து பொருள்களை வாங்கிக்கொண்டு போன யவனக் கப்பல் வியாபாரிகள் காசுகளைக் கொடுத்தே பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள். இந்தச் செய்தியைச் சங்க செய்யுட்கள் கூறுகின்றன. அக்காலத்திலிருந்த பிளைனி (Pliny) என்னும் உரோமாபுரி அறிஞரும் இதைக் கூறியுள்ளார். பரணர், தாம் பாடிய புறம். 343 ஆம் செய்யுளில், “மனைக் குவைஇய கறிமூடையாற் கலிச்சும் மைய கரை கலக்குறுந்து
|