பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு153

பொருள் புறப்பொருள்களைப் பற்றிச் செய்யுள் இயற்றினார்கள். ஆனால், அக்காலத்தில் கல்வி கற்றவர் தொகை மிகக் குறைவு. பொதுவாக நாட்டு மக்கள் கல்வியில்லாதவர்களாகவே இருந்தார்கள்.

பொதுவாகப் புலவர்களுடைய வாழ்க்கை வறுமையுந் துன்பமுமாக இருந்தது. பிரபுக்கள் எல்லோரும் அவர்களை ஆதரிக்க வில்லை, சிலரே ஆதரித்தார்கள். அவர்கள் பெற்ற சிறு பொருள், வாழ்க்கைக்குப் போதாமலிருந்தது. ஆகவே, புலவர்கள் புரவலர்களை நாடித் திரிந்தனர். அவர்களில் நல்லூழ் உடைய சில புலவர்கள் பெருஞ்செல்வம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்கள். கொங்குநாட்டுப் புலவர் வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது.

சங்க காலத்தில் இருந்த கொங்கு நாட்டுப் புலவர்களைப் பற்றிக் கூறுவோம்.

அஞ்சியத்தைமகள் நாகையார்

இவர் பெண்பால் புலவர். நாகை என்பது இவருடைய பெயர். அஞ்சி யத்தைமகள் என்பது சிறப்புச் சொல். தகடூர் அதிகமான் அரசர்களில் அஞ்சி என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தார்கள். அந்த அஞ்சியரசர்களில் ஒருவருடைய அத்தை மகள் இவர். ஆகையால் அஞ்சி யத்தை மகள் நாகையார் என்று பெயர் கூறப்பெற்றார். அத்தை மகள் என்பதனால் அஞ்சியினுடைய மனைவி இவர் என்று சிலர் கருதுகின்றனர். அஞ்சியின் அவைப் புலவராக நெடுங்காலம் இருந்த ஒளவையாரிடம் இந்த நாகையார் கல்வி பயின்றவராக இருக்கலாமே?

இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 352ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. குறிஞ்சித் திணையைப் பாடிய இந்தச் செய்யுள் இனிமையுள்ளது. பாறையின்மேல் இருந்து ஆடுகிற மயிலுக்குப் பின்னால் பெரிய பலாப்பழத்தை வைத்திருக்கிற கடுவன் குரங்கு. ஊர்த்திருவிழாவில் விறலியொருத்தி பரதநாட்டியம் ஆடும்போது அவளுக்குப் பின்னாலிருந்து முழவுகொட்டும் முழவன்போலக் காட்சி யளித்ததை இவர் இச்செய்யுளில் கூறுகிறார். மணப் பெண் ஒருத்தி தன்னுடைய தோழியிடம் தன்னுடைய மனநிறைந்த மகிழ்ச்சியைக் கூறியதாக இவர் கூறியுள்ளது படிப்பவருக்குப் பேருவகை தருகின்றது. அஞ்சியரசன்மேல் புலவர் பாடிய செய்யுளுக்கு இசையமைத்துப் பாடும் பாணனுடைய இசையில், இசையும் தாளமும் ஒத்திருப்பது போலவும் காதலன்- காதலியின் திருமண நாள் போலவும்