17. கொங்கு நாட்டுப் புலவர்கள் புலவர் நிலை சங்க காலத்துக் கொங்கு நாட்டின் கல்வி நிலை ஏனைய தமிழ் நாட்டிலிருந்தது போலவே இருந்தது. புலவர்களுக்கு உயர்வும் மதிப்பும் மரியாதையும் இருந்தன. புலவர்கள் ஒரே ஊரில் தங்கிக் கிணற்றுத் தவளைகளைப் போலிராமல், பல ஊர்களில் பல நாடுகளிலும் சென்று மக்களிடம் பழகி நாட்டின் நிலை, சமுதாயத்தின் நிலைகளை நன்கறிந் திருந்தார்கள். மக்களிடையே கல்வி பரவாமலிருந்தாலும், கற்றவருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தபடியால், வசதியும் வாய்ப்பும் உள்ளவர் முயன்று கல்வி கற்றனர். ஆண்பாலார், பெண் பாலார், அரசர், வாணிகர், தொழிலாளர் முதலியவர்கள் அக்காலத்தில் புலவர்களாக இருந்தார்கள். அந்தப் பழங்காலத்திலே இருந்த அந்தப் புலவர்கள் இரண்டு பொருள்களைப் பற்றிச் சிறப்பாகச் செய்யுள் இயற்றினார்கள். அவற்றில் ஒன்று அகப்பொருள், மற்றொன்று புறப் பொருள். அகப்பொருள் என்பது காதல் வாழ்க்கையைப் பற்றியது. புறப்பொருள் என்பது பெரும்பாலும் வீரத்தையும் போர்ச் செயலையும் பற்றியது. சங்க இலக்கியங்களில் சிறப்பாக இவ்விரு பொருள்கள் பேசப்படுகின்றன. பலவகையான சுவைகள் இச்செய்யுட்களில் காணப் படுகிறபடியால், இவற்றைப் படிக்கும்போது இக்காலத்திலும் மகிழ்ச்சி யளிக்கின்றன. மேலும், சங்கச் செய்யுட்கள், அக்காலத்து மக்கள் வாழ்க்கை வரலாற்றை யறிவதற்குப் பேருதவியாக இருக்கின்றன. புலவர்கள் பொதுவாக அக்காலத்தில் வறியவராக இருந்தார்கள். அவர்கள் செல்வர்களையும் அரசர்களையும் அணுகி அவர்களுடைய சிறப்புகளைப் பாடிப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள். புலவர்கள் பொதுவாக யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் (வண்டிகள்) பரிசாகப் பெற்றார்கள். பரிசாகப் பெற்ற இவைகளை விற்றுப் பொருள் பெற்றனர். சில சமயங்களில் அரசர்கள் புலவர்களுக்கு நிலங்களையும் பொற் காசுகளையும் பரிசாகக் கொடுத்தார்கள். பொருள் வசதியுள்ளவர்கள் - அரசர், வாணிகர் பெருநிலக்கிழார் போன்றவர்கள் - கல்வி இன்பத்துக் காகவே கல்வி பயின்று புலவர்களாக இருந்தார்கள். அவர்களும் அகப் |