பக்கம் எண் :

158மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

ஒளவையார் காலத்தில் பாரிவள்ளல் இருந்தான். மூவேந்தர் பாரியின் பரம்புமலைக் கோட்டையை முற்றுகை யிட்டிருந்த போது, கிளிகளைப் பழக்கிக் கோட்டைக்கு வெளியேயிருந்த நெற்கதிர்களைக் கொண்டுவந்த செய்தியை ஒளவையார் கூறுகிறார் (அகம். 303: 10- 14).

ஒளவையார் காலத்தில் தகடூர்ப் போர் நிகழ்ந்தது. கொங்கு நாட்டில் தங்கள் இராச்சியத்தை நிறுவிய இரும்பொறையரசர்கள் தங்கள் இராச்சியத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரின்மேல் படையெடுத்து வந்து, கோட்டையை முற்றுகையிட்டுப் போர் செய்தான். அந்தப் போரில் இரு தரப்பிலும் பல வீரர்கள் மாண்டார்கள். அதிகமான் நெடுமான் அஞ்சியின் மார்பில் அம்பினால் புண் உண்டாயிற்று. அப்போது ஒளவையார் அவனைப் பாடினார் (புறம். 93). பிறகு அப்புண் காரணமாக அவன் இறந்துபோனான். அப்போதும் அவனை ஒளவையார் பாடினார் (புறம். 236, 231). அவனுக்கு நடுகல் நட்டு நினைவுக்குறி யமைத்தார்கள். அச்சமயத்திலும் ஒளவையார் ஒரு செய்யுளைப் பாடினார் (புறம். 232).

ஒளவையார், அதிகமான் நெடுமான் அஞ்சியாலும் அவன் மகன் பொகுட்டொழினியாலும் ஆதரிக்கப்பட்டவர். தகடூரில் அதிகமானுடன் போர் செய்த பெருஞ்சேரல் இரும் பொறையையும் அவனுடைய தாயாதித் தமயனான சேரன் செங்குட்டுவனையும் அரிசில்கிழாரும் பரணரும் பாடியிருக்கிறார்கள். ஒளவையாரின் காலத்திலிருந்த பாரியைக் கபிலர் பாடியுள்ளார். ஆகவே, இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் ஒளவையாரும் வாழ்ந்தார் என்பது தெரிகின்றது. பாரியைப் பாடின கபிலர், செங்குட்டுவனின் தாயாதிச் சிற்றப்பனான செல்வக் கடுங்கோ வாழியாதன் மீது 7ஆம் பத்துப் பாடினார் செங்குட்டுவனும் செல்வக்கடுங்கோ வாழியாதனும் ஏறத்தாழ சமகாலத்தில் இருந்தவர். மேலும் கபிலரும் பரணரும் சமகாலத்தில் இருந்தவர் என்பது தெரிந்த விஷயம். ஆகவே, இவர்கள் எல்லோரும் சமகாலத்தவர் என்பது தெரிகின்றது. மேலும், செங்குட்டுவனுக்குத் தம்பியாகிய இளங்கோவடி களும் இவர்களின் நண்பராகிய சீத்தலைச் சாத்தனாரும் ஒளவையார் காலத்தில் இருந்தவர்கள்.

ஒளவையாரின் செய்யுட்கள் தொகை நூல்களில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இவருடைய, செய்யுள்கள் அகநானூற்றில் நான்கும், குறுந்தொகையில் பதினைந்தும், நற்றிணையில் ஏழும், புறநானூற்றில்