பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு157

அவ்வச் சமயங்களில் பாடியுள்ளார். அதிகமான் நெடுமான் அஞ்சிக்கு மகன் பிறந்தபோது அவன் போர்க்களத்திலிருந்து வந்து மகனைப் பார்த்தான். அவ்வமயம் அவன் இருந்த காட்சியை ஒளவையார் பாடியுள்ளார். கையில் வேலும் மெய்யில் வியர்வையும் காலில் வீரக் கழலும் மார்பில் அம்பு தைத்த புண்ணும் உடையவனாக வெட்சிப் பூவும் வேங்கைப்பூவும் விரவித் தொடுத்த மாலையையணிந்து கொண்டு புலி யுடன் போர் செய்த யானையைப் போல அவன் காணப்பட்டான் என்று கூறுகின்றார் (புறம். 100). அவனுடைய மகன் பெயர் பொகுட்டெழினி.

அதிகமான் ஒரு சமயம் ஒளவையாரைத் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது அனுப்பினான். இவரை வரவேற்றுத் தொண்டைமான் தன்னுடைய படைக்கலச் சாலையைக் காட்டினான். போர்க் கருவிகள் எண்ணெயிடப்பட்டு மாலைகள் சூட்டி வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அதுகண்ட ஒளவையார், தன்னுடைய அதிகமான் அரசனின் போர்க் கருவிகள் பழுது தீர்க்கப்டுவதற்காகக் கொல்லனுடைய உலைக்களத்தில் இருக்கின்றன என்று ஒரு செய்யுள் பாடினார் (புறம். 95). அதாவது, அதிகமான் தன்னுடைய ஆயுதங்களைப் பயன்படுத்திக்கொண்டே யிருந்தபடியால் அவற்றை அவன் ஆயுதச் சாலையில் வைக்கவில்லை என்பது கருத்து.

எளிதில் கிடைக்காத அருமையான நெல்லிக்கனி நெடுமானஞ்சிக்குக் கிடைத்தது. அதனை அருந்தியவர் நெடுங்காலம் வாழ்ந் திருப்பார்கள். அந்தக் கனியை அவன் அருந்தாமல் ஒளவையாருக்குக் கொடுத்து உண்ணச் செய்தான். உண்டபிறகுதான் அக்கனியின் சிறப்பை ஒளவையார் அறிந்தார். அப்போது, அதிகமானுடைய தன்னலமற்ற பெருங்குணத்தை வியந்து வாழ்த்தினார் (புறம் 91). நெடுமான் அஞ்சியை ஒளவையார் வேறு சில பாடல்களிலும் பாடியுள்ளார். அவை புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன (புறம். 87, 88, 89, 90, 91, 94, 97, 98, 101, 103, 104, 315, 320).

நெடுமானஞ்சியின் மகனான பொகுட்டெழினியையும் ஒளவையார் பாடியுள்ளார். அவன் அக்காலத்து வழக்கப்படி, பகைவருடைய நாட்டில் சென்று ஆனிரைகளைக் கவர்ந்து வந்ததைப் பாடியுள்ளார் (குறுந். 80 : 4-6). அவனுடைய வீரத்தையும் நல்லாட்சியையும் பாடி இருக்கிறார் (புறம். 102). அவன் பகைவருடைய கோட்டையொன்றை வென்றபோது ஒளவையாருக்குப் புத்தாடை கொடுத்து விருந்து செய்தான் (புறம். 392).