170 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
யானைக்கட்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை விளங்கில் என்னும் ஊரில் பகைவருடன் போர் செய்து வென்றான். அப்போது அவன் தன்னைப் பாடுவதற்கு இக்காலத்தில் கபிலர் இல்லையே என்று கவலையடைந்தான். (இவனுடைய பாட்டனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனை 7ஆம் பத்தில் பாடிய கபிலர் முன்னமே இறந்து போனார்.) அரசன் கவலைப்படுவதை அறிந்த பொருந்தில் இளங் கீரனார் கபிலரைப் போன்று உம்மை நான் பாடுவேன் என்று கூறினார். “செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுள னாயின் நன்றுமன் என்றநின் ஆடுகொள் வரிசைக் கொப்பப் பாடுவல் மன்னாற் பகைவரைக் கடப்பே”(புறம். 53: 11-15) இவ்வாறு இந்தப் புலவர் பாடியிருக்கிறபடியால் இவரே இவ்வரசன் மேல் பத்தாம் பத்துப் பாடியிருக்கலாம் என்று கருதுவது தவறாகாது. பதிற்றுப்பத்தில் 7, 8, 9, 10ஆம் பத்துகள் கொங்குச் சேரர் மேல் பாடப்பட்டவை என்பதும், ஆகவே அவை கொங்கு நாட்டு இலக்கியம் என்பதும் தெரிகின்றன. பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் வெறும் இயற்றமிழ்ச் செய்யுட்கள் மட்டுமன்று. இச்செய்யுட்கள் இசையுடன் பாடப்பட்டன என்பது தெரிகிறது. ஒவ்வொரு செய்யுளின் அடிக்குறிப்புகளிலிருந்து இதனை யறிகிறோம். ஆகவே, புலவர்கள் இயற்றின இந்தச் செய்யுட்களை அந்தந்த அரசர் முன்னிலையில் பாடியபோது பாணரைக் கொண்டு இசையுடன் பாடப்பட்டன என்பது தெரிகிறது. ஒவ்வொரு செய்யுளின் அடியிலும் துறை, தூக்கு, வண்ணம் என்னும் தலைப்பில் இசைக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. துறை என்பதில் காட்சி, வாழ்த்து, செந்துறைப் பாடாண்பாட்டு, பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு வஞ்சித் துறை பாடாண்பாட்டு முதலான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. தூக்கு என்பதில் செந்தூக்கு, செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் என்று தூக்கு (தூக்கு - தாளம்) குறிப்பிடப்பட்டுள்ளன. வண்ணம் என்பதில் ஒழுகு வண்ணம், சொற்சீர் வண்ணம் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இசைத்தமிழைப் பற்றிய குறிப்புகள். |