பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு171

தகடூர் யாத்திரை

கொங்கு நாட்டில் தகடூரை அரசாண்டவர் அதிகமான் பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் என்றும் அவர்கள் தகடூரைச் சூழ்ந்து கோட்டை மதிலைக் கட்டி அரண் அமைத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கொங்கு நாட்டின் தென் பகுதிகளை அரசாண்ட பெருஞ்சேரலிரும்பொறை, தன் காலத்திலிருந்த அதிகமான் நெடுமான் அஞ்சியின் மேல் படை யெடுத்துச் சென்று தகடூரை முற்றுகையிட்டுப் போர் செய்தான் என்றும் அந்தப் போர் பலகாலம் நடந்து கடைசியில் பெருஞ்சேரலிரும்பொறை அதைக் கைப்பற்றினான் என்றும் கூறினோம். அந்தத் தகடூர்ப் போரைப் பற்றி ஒரு நூல் அக்காலத்திலேயே செய்யப்பட்டிருந்தது. அது சிலப்பதிகாரத்துக்கு முன்னரே இயற்றப்பட்ட நூல் என்பது ஆராய்ச்சியிலிருந்து தெரிகிறது. அதுதான் தகடூர் யாத்திரை என்னும் நூல்.

அக்காலத்தில் அரசர்கள் போர்செய்யும்போது புலவர்களும் போர்க்களத்துக்குச் சென்று எந்தெந்த வீரன் எந்தெந்த விதமாகப் போர் செய்கிறான் என்பதை நேரில் கண்டு அவர்களின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவது அக்காலத்து வழக்கமாக இருந்தது. தகடூர்ப் போரிலும் சில புலவர்கள் போர்க்களஞ் சென்று போர்ச் செயலைக் கண்டு பாடினார்கள். அவர்கள் பாடிய அந்தப் பாடல்களின் தொகுப்புதான் தகடூர் யாத்திரை என்னும் நூல். இப்போது நூல் முழுவதும் கிடைக்காதபடியால் அந் நூலில் எந்தெந்தப் புலவர்களின் செய்யுள்கள் இருந்தன என்பது இப்போது தெரியவில்லை. ஆனால், பொன்முடியார், அரிசில்கிழார் என்னும் புலவர்களின் செய்யுள்களும் அந்நூலில் இருந்தன என்பது திண்ணமாகத் தெரிகிறது.

சரித்திரச் செய்தியைக் கூறுகிற தகடூர் யாத்திரை இப்போது மறைந்து விட்டது. அந்நூலின் சில செய்யுட்கள் மட்டுமே இப்போது கிடைத் துள்ளன. இந்நூல் சென்ற 19ஆம் நூற்றாண்டில், திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் இருந்தது. பிறகு, இந்தச் சுவடி மறைந்து போயிற்று. இதுபற்றி டாக்டர் உ.வே.சாமி நாதையர் என் சரித்திரம் என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்.

“அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், ‘நாங்குனேரியி லிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு, இப்பிரதியை இரவலாக வாங்கிக்