பக்கம் எண் :

176மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

ஆகவே, அசோகர் காலத்துக்கு முன்னமே தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வழங்கி வந்தது என்பது ஒரு கருத்து. பிராமி எழுத்து, தென் இந்தியாவில் தோன்றி வளர்ந்து பிறகு வடஇந்தியாவுக்குச் சென்றது என்பது இன்னொரு கருத்து. தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வருவதற்கு முன்பு ஏதோ ஒரு வகையான எழுத்து இருந்து வந்தது. பிராமி எழுத்து தமிழ்நாட்டுக்கு வந்து வேரூன்றிய பிறகு பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்துவிட்டது என்பது வேறொரு கருத்து.

பிராமி எழுத்துக்கு முன்பு தமிழில் வேறு எழுத்து இல்லை என்பதற்குச் சான்று இல்லை. பிராமி எழுத்துக்கு முன்பு ஏதோ ஒரு வகையான தமிழ் எழுத்து வழங்கியிருக்க வேண்டும். வேறு வகையான எழுத்து இருந்ததா இல்லையா என்பதற்குச் சான்று வேண்டுமானால், சங்க காலத்திலே நடப்பட்ட நடுகற்களைக் (வீரகற்களைக்) கண்டுபிடிக்க வேண்டும். சங்ககாலத்து நடுகற்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப் படவில்லை. சங்க காலத்து நடுகற்கள் போரில் இறந்துபோன வீரர்களின் நினைவுக் குறியாக நடப்பட்டவை. அந்த நடுகற்களில் இறந்த வீரனுடைய பெயரையும் சிறப்பையும் எழுதியிருந்தபடியால், அந்த நடுகற்களைக் கண்டுபிடித்தால், அவற்றில் எழுதப்பட்ட எழுத்து பிராமி எழுத்தா அல்லது வேறு வகையான எழுத்தா என்பது விளங்கிவிடும். ஆனால், அந்தக் காலத்து வீர கற்கள் இதுவரையில் ஒன்றேனும் கண்டு பிடிக்கப்படவில்லை.

கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் தமிழ்நாட்டு மலைக் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற படியால், அக்காலத்து நடுகற்களிலும் பிராமி எழுத்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் கருதக்கூடும். இப்போது தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள பழைய பிராமி எழுத்துக்கள், பௌத்த, சமண முனிவர்கள் தங்கித் தவஞ்செய்வதற்காக அமைக்கப்பட்ட மலைக் குகைகளிலே எழுதப் பட்டவை. ஆனால், பௌத்த, சமணர் அல்லாத துறவிகள் மலைக்குகைகளில் தங்கித் தவஞ் செய்யவில்லை. பௌத்த, சமணர்களுக்காக அமைக்கப்பட்ட மலைக் குகைகளிலே பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிறபடியால் இவ்வெழுத்துக்களைப் பௌத்த மதத்தாரும் சமண மதத்தாரும் மட்டும் உபயோகித்திருக்க வேண்டும். பௌத்த, சமண மதத்தாரல்லாத அரசர் முதலியோர் அக் குகைகளைத் தானஞ் செய்திருந்தாலும், அவை வடநாட்டு மதங்களைச் சார்ந்த பௌத்த, சமணருக்காக அமைக்கப்பட்டபடியால் அவற்றில் பிராமி எழுத்தை எழுதியிருக்கவேண்டும். பௌத்த, சமணரல்லாத