பக்கம் எண் :

 : 

19. சங்க காலத்துத் தமிழெழுத்து

கடைச்சங்க காலத்தில் வழங்கி வந்த தமிழ் எழுத்தின் வரி வடிவம் எது என்பது இக்காலத்தில் ஒரு கேள்வியாக இருக்கிறது.

தமிழகத்தில் பழங்காலத்தில் வழங்கி வந்தது வட்டெழுத்து தான் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கருதி வந்தனர். அக்காலத்தில் பிராமி எழுத்து தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட வில்லை. பிறகு, பிராமி எழுத்துக்கள் தமிழ்நாட்டு மலைக் குகைகளில் எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. பாண்டி நாடு, புதுக்கோட்டை, தொண்டை நாடு, கொங்கு நாடு ஆகிய நாடுகளில் மலைக்குகைகளில் கற்பாறைகளிலே பொறிக்கப்பட்ட பிராமி எழுத்துக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையில்லாமல், அரிக்கமேடு, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் முதலிய இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது அவ்விடங்களில் கிடைத்த மட்பாண்டங்களிலும் பிராமி எழுத்துக்கள் காணப் பட்டன. இவ்வெழுத்துகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு உட்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இந்தச் சான்றுகளைக் கொண்டு சிலர் சங்க காலத்தைக் கணக்கிடுகிறார்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத தேசத்தை யரசாண்ட அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் வட இந்தியாவி லிருந்து பிராமி எழுத்தைப் பௌத்தப் பிக்குகள் தமிழகத்தில் கொண்டு வந்தார்கள் என்றும் இந்தப் பிராமி எழுத்து வந்த பிறகு இதைத் தமிழர் நூல் எழுதப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் அதற்கு முன்பு தமிழில் எழுத்து இல்லை என்றும் இப்போது ஒரு சிலர் கூறுகின்றனர். பிராமி எழுத்து தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு இங்கு எழுத்தே கிடையாது என்பது இவர்கள் கூற்று இதுதவறான கருத்து. பிராமி எழுத்து தமிழகத்துக்கு வருவதற்கு முன்பு ஏதோ ஒரு வகையான எழுத்து வழங்கி வந்தது. அந்த எழுத்தினால் சங்க நூல்கள் எழுதப் பட்டன.

பிராமி எழுத்தின் தோற்றத்தைப் பற்றி வெவ்வேறு அபிப் பிராயங்கள் கூறப்படுகின்றன. அசோகச் சக்கரவர்த்தி காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிராமி எழுத்து இருந்து வந்தது.