பக்கம் எண் :

174மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

போக்கின் கண் இடைச்சுரத்துரைத்த பத்து, மறுதரவுப் பத்து என்னும் பத்துப் பிரிவுகளையுடையது.

முல்லைத்திணை, செவிலிகூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, விரவுப்பத்து, புறவு அணிப் பத்து, பாசறைப் பத்து, பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து என்னும் பத்துத் துறைகளைக் கொண்டுள்ளது.

நெய்தற்றிணையில், கிழவற்குரைத்த பத்தில் 9ஆம் 10ஆம் செய்யுட்கள் மறைந்து போய்விட்டன. முல்லைத் திணையில் கிழவன் பருவம் பாராட்டுப் பத்தில் ஆறாம் செய்யுளின் இரண்டாம் அடியிலும் தேர்வியங்கொண்ட பத்தின் பத்தாம் செய்யுளின் இரண்டாம் அடியிலும் சில எழுத்துகள் மறைந்துள்ளன.

ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர் எல்லோரும் கொங்கு நாட்டவர் அல்லர். கபிலர் மட்டுங் கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்தவர். இந்நூலைத் தொகுத்த கூடலூர் கிழார், கொங்கு நாட்டுப் புலவர்.