பக்கம் எண் :

186மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு வாசிக்கிறார்:

நல்லிய் ஊர்ஆ பிடந்தை மகள் கீரன்கொற்ற ... ...

இவ்வாறு வாசித்த இவர் ‘நல்லியூர் பிடந்தையின் மக்களான கீரன், கொற்ற(ன்)’ என்று விளக்கங் கூறுகிறார். மகள் என்பதை மக்கள் என்று கூறுகிறார்.8

திரு. மகாலிங்கம் நாளாளப ஊர் என்று படிப்பது தவறு. திரு. மகாதேவன் நல்லி ஊர் என்று படிப்பது ஓரளவு சரி. 7ஆவது எழுத்தை மகாலிங்கம் அடியோடு விட்டுவிட்டார். மகாதேவன் அவர்கள் அதைப் பிராமி அ என்று வாசித்துள்ளார். அது பிராமி ப் என்னும் எழுத்தாகும். மகாலிங்கம் ‘மகன்’ என்று படிப்பது சரி. மகாதேவன் ‘மகள்’ என்று வாசித்து ‘மக்கள்’ என்று பொருள் கூறுவது சரியெனத் தோன்ற வில்லை. மகன் என்பதே சரியானது. கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளின் பெயர் என்று மகாலிங்கம் கூறுவது சரி. கீரன், கொற்றன் இரண்டு ஆட்கள் என்று மகாதேவன் கூறுவது சரியெனத் தோன்றவில்லை.

இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம்.

நள்ளிவ்ஊர்ப் பிடந்தை மகன் கீரன் கொற்ற(ன்)

என்பது இதன் வாசகம். கொற்றன் என்பதில் கடைசி எழுத்தாகிய ன் சாசனத்தில் இல்லை.

இதை விளக்கிக் கூறுவோம்.

முதல் மூன்று எழுத்துகளை நள்ளி என்று படிப்பதே சரியாகும். பிராமி எழுத்துகளில் ல, ள எழுத்துகளுக்கு மிகச் சிறு வேற்றுமைதான் உண்டு. லகரத்தின் வலது பக்கத்தின் கீழே, கீழாக வளைந்த கோடு இட்டால் ளகரமாகிறது. இந்தச் சாசன எழுத்தின் நிழற்படத்தை உற்று நோக்கினால் ளகரமாகத் தோன்றுவதைக் காணலாம். ஆகையால், நள்ளி என்று வாசிப்பதுதான் சரி என்று தெரிகிறது. மேலும், நல்லி என்ற பெயர் சங்க காலத்தில் காணப்படவில்லை. நள்ளி என்னும் ஒரு அரசன் கூறப்படுகிறான்.

“நளிமலை நாடன் நள்ளி” (சிறுபாண். 107), “கழல் தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி” (அகம். 238: 14), “திண்தேர் நள்ளி கானம்” (குறுந். 210:1), “வல்வில் இளையர் பெருமகன் நள்ளி” (அகம். 152:15),