பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 185 |
எனவே, இந்த எழுத்துக்களில் காணப்படுகிற பொன் வாணிக னுடைய பெயர் பொத்தி என்பதில் ஐயமில்லை. மகாதேவன் நெத்தி என்று படிப்பது தவறு. நெத்தி என்னும் பெயர் இருந்ததாகச் சான்று இல்லை. டி.வி. மகாலிங்கம் நேர்த்தி என்று படிப்பதும் பொருத்தமாக இல்லை. அதிட்டானம் என்பது அதிஷ்டானம் என்னும் சொல்லின் தமிழாக்கம். இங்கு இது இந்தக் குகையைக் குறிக்கின்றது. புகழூர்ச் சாசனம் இன்னொன்றைப் பார்ப்போம். இது சாசன எழுத்து இலாகாவில் 1927 - 28ஆம் ஆண்டு தொகுப்பில் 346ஆம் எண்ணாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரே வரியில் இருபத்தொரு பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பாறைக் கல்லில் புரைசல்களும் புள்ளிகளும் கலந்திருப்பதால் சில எழுத்துக்களின் சரியான வடிவம் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது ஆனாலும் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது. இதில் காணப்படுகிற பிராமி எழுத்துகளின் வரிவடிவம் இது. புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பவை பாறையில் உள்ள புரைசல்கள். 
இதன் இப்போதைய எழுத்து வடிவம் இது: ந ள ளி வ ஊ ர ப பி ட ந தை ம க ன கீ ர ன கொ ற்ற ன இவ்வெழுத்துக்களுக்குப் புள்ளியிட்டுப் படித்தால் இவ்வாறாகிறது. நள்ளிவ் ஊர்ப் பிடந்தைமகன் கீரன் கொற்றன் திரு. டி. வி. மகாலிங்கம் அவர்கள் இதை இவ்வாறு படிக்கிறார்: நாளாளபஊர் பிடந்தை மகன் கீரன்கொற்றன் இவ்வாறு படித்துப் பின்னர்க் கீழ்க்கண்டவாறு விளக்கங் கூறுகிறார். ஆதன் + தந்தை = ஆந்தை என்பது போல, பிடன் + தந்தை = பிடந்தை என்றாயிற்று. பிடன் = படாரன், பட்டரான். தந்தை = பெரியவன், மேலானவன், உயர்ந்தவன், புனிதமானவன்.7 பிடன் தந்தை மகன் கீரன் கொற்றன் என்றும், நாளாளப ஊர் என்றும் இவர் கூறுவது சரியெனத் தோன்றவில்லை. |