பக்கம் எண் :

184மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

இவர்கள் ‘கருவூர் பொன் வாணிகன் ... ... அதிட்டானம்’ என்று வாசித்தது முழுவதும் சரியே. தவறு இல்லை. ஆனால், இரண்டாவது வரியின் முதல்மூன்று எழுத்துகளை வாசித்தலில் தவறு காணப்
படுகிறது. இந்த எழுத்துகளில் கல் பொளிந்து எழுத்துகளின் சரியான உருவம் தெரியவில்லை. இக்காரணத் தினால் மகாலிங்கம் அவர்கள் இவ்வெழுத்துக்களை நேர்த்தி என்று வாசிக்கிறார். மகாதேவன் அவர்கள் நத்தி என்று வாசிக்கிறார். இப்படிப் படிப்பது பொருத்தமாகத் தோன்ற வில்லை. இரண்டாவது வரியின் முதலெழுத்தை உற்று நோக்கினால் அது பொ என்று தோன்றுகிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துகளையும் சேர்த்து வாசித்தால் பொத்தி என்று படிக்கலாம். அதாவது கருவூர் பொன் வாணிகனுடைய பெயர் ‘பொத்தி’ என்பது. ஆகவே, இந்த எழுத்துகளின் முழு வாசகம் இது:

கருவூர் பொன் வாணிகன்
பொத்தி அதிட்டானம்

கருவூரில் பொன் வாணிகம் செய்த பொத்தி என்பவர் இந்த அதிட் டானத்தை (முனிவர் இருக்கையை) அமைத்தார் என்பது இதன் கருத்து. இருக்கையை யமைத்தார் என்றால், குகையிலுள்ள பாறைகளைச் செப்பஞ் செய்து கற்படுக்கைகளை அமைத்தார் என்பது பொருள்.

விளக்கம்:

கருவூர், கொங்கு நாட்டையரசாண்ட சேர அரசர்களுக்குச் சங்க காலத்தில் தலைநகரமாக இருந்தது என்பதை அறிவோம். அவ்வூர் அக் காலத்தில் பேர்போன வாணிகப் பட்டணமாக இருந்தது. இங்கு, கிரேக்க ரோமர்கள் (யவனர்கள்) வந்து வாணிகஞ் செய்தார்கள். இவ்வூரில் பொன் வாணிகஞ் செய்தவர்களில் ஒருவர் பெயர் பொத்தி என்பது. பொத்தன், பொத்தி என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கி வந்தது. பொத்த குட்டன் என்னுந் தமிழன் ஒருவன் இலங்கை அநுராத புரத்திலே செல்வாக்குள்ளவனாக இருந்தான். அவன், தான் விரும்பிய படியெல்லாம் இலங்கை மன்னர்களைச் சிம்மாசனம் ஏற்றினான் என்று மகாவம்சத்தின் பிற்பகுதியான சூலவம்சம் என்னும் நூல் கூறுகிறது. பொத்தி என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பொத்தியார் என்று கூறப்படுகிறார். அவர் இயற்றிய செய்யுட்கள் புறநானூற்றில் (புறம். 217, 220, 221, 222, 223) உள்ளன.