216 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
2. வேறு அரசர்கள் மகேந்திரவர்மன் காலத்தில் வட இந்தியாவை அரசாண்ட மன்னன் புகழ்பெற்ற ஹர்ஷவர்த்தனன். கன்னோசி நாட்டின் அரசனாகிய ஹர்ஷன் கி.பி. 606 முதல் 647 வரையில் அரசாண்டான். இவன் ஆட்சிக்கு வந்தவுடன் ஆறு ஆண்டு போர்செய்து பதினெட்டு அரசர்களை வென்று அவர்களின் நாடுகளைத் தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். மேலும், கிழக்கே காமரூப (அஸ்ஸாம்) நாட்டின் அரசனாயிருந்த துருவபட்டன் என்பவனும் இவனுக்கு அடங்கிக் கப்பங்கட்டி வந்தனர்.1 இவ்வாறு வட இந்தியா முழுவதையும் வென்று மகாராசன் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற ஹர்ஷவர்த்தனன், தக்கிண தேசத்தையும் கைப்பற்ற எண்ணி, சளுக்கிய நாட்டின் மேல் படையெடுத்தான். சளுக்கிய அரசனான புலிகேசி (இரண்டாவன்), நருமதை யாற்றங்கரையில் ஹர்ஷனை எதிர்த்துப் போர்செய்து வெற்றி கொண்டான். இது கி. பி. 620 இல் நடந்தது. தோல்வியுற்ற ஹர்ஷன் அதன் பிறகு நருமதி யாற்றுக்குத் தெற்கே வரவில்லை. ஹர்ஷ வர்த்தனுடைய ஆட்சி, தெற்கே நருமதை யாற்றிலிருந்து வடக்கே இமயமலை வரையில் வட இந்தியா முழுவதையும் கொண்டிருந்தது. ஹர்ஷவர்த்தனனுடைய இராச்சியத்திற்குத் தெற்கே தக்கண இந்தியாவை அக்காலத்தில் அரசாண்ட மன்னன் இரண்டாம் புலிகேசி. இவன் சளுக்கிய மரபைச் சார்ந்தவன் ஆகையால், இவனுடைய நாடு சளுக்கிய நாடு என்று பெயர் பெற்றது. சளுக்கியருக்கு வல்லபர் என்னும் பெயரும் உண்டு. புலிகேசி கி. பி. 608 முதல் 642 வரையில் அரசாண்டான். இவன் அரசாட்சி பெற்றவுடன் நளர், மௌரியர், கடம்பர், காலசூரி, கங்கர், ஆலூபர், லாடர், மாளவர், கூர்ச்சரர் கலிங்கர் முதலிய அரசர்களை வென்று அவர்கள் நாட்டைத் தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டு தனது இராச்சியத்தைப் பெரிதாக்கிக் கொண்டான். இவன் வென்றவர்களில் நளர் என்பவர் நளவாடி விஷயம் என்னும் நாட்டினர். இது பல்லாரி கர்னூல் மாவட்டங்களில்
1. Epi. Ind. Vol. X. P. 105. |