பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 227 |
அக்க போதியும் தாட்டோபதிஸ்ஸனும் மாறிமாறிப் போர் செய்து கொண்டிருந்தபடியால், போரின் காரணமாக நாட்டிலே வறுமை உண்டாயிற்று. நாட்டுமக்கள் பொருளை இழந்து துன்பப்பட்டனர். நிலபுலன்கள் விளையாமல் மக்கள் அல்லல் அடைந்தார்கள். அடிக்கடி போர் செய்தபடியினாலே அரசர்களிடம் பொருள் இல்லாமற் போயிற்று. ஆகவே, அவர்கள் பௌத்தப் பள்ளிகளிலும் விகாரைகளிலும் இருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து அப் பொருள்களைப் போருக்காகச் செலவுசெய்தார்கள். தாட்டோபதிஸ்ஸன் மகா விகாரை, அபயகிரி விகாரை, ஜேதவன விகாரை என்னும் விகாரைகளில் இருந்த பொன்னையும் பொருளை யும் கவர்ந்து கொண்டதோடு, தாகோப (தாதுகர்ப்பம்) என்னும் பௌத்தப் பள்ளிகளில் இருந்த விலையுயர்ந்த பொருள்களையும், பொன் நகைகளையும், பொன்னால் செய்யப்பட்டிருந்த புத்த விக் கிரகங்களையும் கவர்ந்து கொண்டான், தூபாராமம் என்னும் பள்ளியில் இருந்த பொன் கலசங்களையும் அதைச்சேர்ந்த சேதியத்தில் அமைத் திருந்த நவரத்தினங்கள் பதித்த பொற்குடையையும் கவர்ந்து கொண்டான். இவ்வாறு இவன் பௌத்தப் பள்ளிகள், பௌத்த விகாரைகள் முதலியவற்றில் இருந்த செல்வங்களைக் கவர்ந்து அவைகளைப் போருக்காகச் செலவு செய்தான். இவ்வாறே அக்கபோதியும் புத்த விகாரைகளில் இருந்த பொருள்களைக் கவர்ந்து கொண்டான். அக்கபோதியின் தம்பியாகிய கஸ்ஸபன் (உபராசன்) தூபராம சேதியத்தைத் திறந்து, அதற்கு முன்னைய அரசர்கள் தானமாக வழங்கியிருந்த பொன்னையும் பொருளையும் கவர்ந்து கொண்டான். தக்கிண விகாரையிலிருந்த சேதியங்களுக்குரிய பொன்னையும் நிதிகளையும் கவர்ந்தான். இவ்வாறு இந்த அரசர்கள் தமக்குள் அடிக்கடி செய்து வந்த போர் களுக்காகப் பௌத்த மடங்களையும் பௌத்தக் கோயில்களையும் கொள்ளையிட்டு அவற்றின் பொருள்களை கவர்ந்து கொண்டார்கள் கடைசியாகத் தாட்டோபதிஸ்ஸன் அக்கபோதியை வென்று மீண்டும் அரனானான். தோற்றுப்போன அக்கபோதி, உரோகண நாட்டிற்குச் சென்றான்; அங்கே நோய்வாய்ப்பட்டு இறந்தான். அக்கபோதி இறந்த பிறகும் தாட்டோபதிஸ்ஸன் அமைதியாக அரசாள முடியவில்லை. ஏனென்றால், அக்கபோதியின் தம்பியும் உபராசனுமாக இருந்த |