கஸ்ஸபன் படையெடுத்து வந்து போர்செய்த தாட்டோபதிஸ்ஸனை வென்றான். போரில் தோற்ற தாட்டோபதிஸ்ஸன் பொன்முடி மணிவடம் முதலிய அரச சின்னங்களைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விட்டான். வெற்றி பெற்ற கஸ்ஸபன், அரச சின்னங்களை அணியாமலே இலங்கைக்கு மன்னனானான். இந்தக் கஸ்ஸபனை, இரண்டாம் கஸ்ஸபன் என்று சரித்திர நூலோர் கூறுவர். கஸ்ஸபன் இலங்கைக்கு அரசனான சில ஆண்டு கழித்துத் தோற்று ஓடிய தாட்டோபதிஸ்ஸன் படை திரட்டிக்கொண்டு போருக்கு வந்தான். கஸ்ஸபன் அவனை எதிர்த்துப் போர் செய்தான். இந்தப் போரில் தாட்டோப திஸ்ஸன் இறந்துபோனான். ஆகவே, கஸ்ஸபனே இலங்கையை அரசாண்டு வந்தான்.1 போரில் இறந்த தாட்டோபதிஸ்ஸனுடைய தங்கை மகனும் உபராசனாக இருந்தவனும் ஆன ஹத்ததா தன் என்பவன் போர்க்களத்தில் உயிர் தப்பிப்பிழைத்துத் தமிழ் நாட்டிற்கு ஓடிவந்து அடைக்கலம் புகுந்தான். மகேந்திரவர்மன் காலத்திலே இலங்கைத் தீவின் அரசியல் நிலை இது. இதனால், இலங்கை அரசியலில் மறைமுகமாகத் தமிழ் நாட்டின் தொடர்பும் இருந்து வந்ததை அறிகிறோம். அக்காலத்தில் இலங்கையின் தலைநகராமாக அநுராதபுரத்தில் தமிழ் வீரர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகமாக இருந்தது.
1. இந்தக் கஸ்ஸபன் மகன் மானவம்மா என்பவன். மானவம்மா பிற்காலத்தில் அரசாட்சி இழந்து, காஞ்சிபுரத்திற்கு வந்து, மகேந்திரவர்மன் மகனான மாமல்லன் என்னும் நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்தான். |