240 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
“வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும் தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்டு ஊனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே.” “கண்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சருங்கிப் பன்னெடுஞ் காலம் மழைதான் மறக்கினும் பஞ்சமுண்டென் றென்னொடும் சூளறும் அஞ்சல்நெஞ் சேஇமை யாதமுக்கண் பொன்நெடுங் குன்றமொன் றுண்டுகண் டீர்இப் புகலிடத்தே.” “தப்பி வானந் தரணிகம் பிக்கிலென் ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவி அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.” 7. அப்பர் காலத்து நாயன்மார் திருநாவுக்கரசர் காலத்தில் இருந்த சைவ அடியார்கள் அப்பூதி யடிகள், முருக நாயனார், சிறுத்தோண்டர், திருநீல நக்கர், நெடுமாற நாயனார், பாண்டிமாதேவியார், குலச்சிறையார், குங்குலியக்கலயர், ஞானசம்பந்தர், திருநீல கண்ட யாழ்ப்பாணர் முதலானோர். திருநாவுக்கரசர், மகேந்திரவர்மன் காலத்திற்குப் பிறகு அவன் மகன் மாமல்லன் முதல் நரசிம்மவர்மன் காலத்திலும் உயிர்வாழ்ந் திருந்தார். நரசிம்மவர்மனுடைய படைத்தலைவர்களில் யானைப் படைத் தலைவராக இருந்தவர் பரஞ்சோதியார் எனப்படும் சிறுத்தொண்டர். சிறுத்தொண்டர், சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் தலை நகரான வாதாபியை வென்றார் என்று பெரியபுராணம் கூறுகிறது.1 இது நிகழ்ந்த ஆண்டு கி. பி. 642 என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். வாதாபியை வென்றபிறகு சிறுத் தொண்டர், படைத்தலைவர் பதவியிலிருந்து நீங்கி சைவத் தொண்டு செய்துவந்தார். அக்காலத்தில் சிறுத்தொண்டர் நாவுக்கரசருடனும் மிக இளைஞரான ஞானசம்பந்த ருடனும் நண்பர் ஆனார். வாதாபியை வென்றபிறகு சிறுத் தொண்டருக்குக் குழந்தை பிறந்ததென்றும், அக்குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்ட காலத்தில் ஞானசம்பந்தர் அவர் இல்லஞ்சென்றார் என்றும் பெரிய புராணம் கூறுகிறது. அதாவது ஏறக்குறைய கி. பி. 648 இல் சம்பந்தரும் சிறுத்தொண்டரும் சந்தித்திருக்கவேண்டும். சிறுத்தொண்டர் நாவுக் |