பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு241

கரசரைத் திருப்புகலூரில் சந்தித்ததும் இதே ஆண்டாக இருக்கலாம். இந்த ஆண்டிற்குப் பிறகு, கி. பி. 649 இல் ஞானசம்பந்தர் பாண்டியன் மாற வர்மனை (நெடுமாறனை)ச் சைவனாக்கியிருக்கவேண்டும். நெடுமாறன் சைவனான பிறகு நாவுக்கரசர் பாண்டியநாட்டிற்கு யாத்திரை சென்றார். பாண்டிநாட்டில் நாவுக்கரசரைப் பாண்டியன் நெடுமாறனும் பாண்டி மாதேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் வரவேற்றனர். பாண்டி நாட்டு யாத்திரையிலிருந்து திரும்பிவந்த சிலநாட்களுக்குப் பிறகு (ஏறக் குறைய கி. பி. 650 இல்) நாவுக்கரச் சிவகதியடைந்திருக்கக் கூடும்.

நாவுக்கரசர் சிவகதிபெற்றது, அவரது 81-ஆவது வயதில் என்று சைவநூல்கள் கூறுகின்றன. எந்த ஆண்டில் என்பது தெரியவில்லை. ஆனால், ஏறக்குறைய கி.பி. 650 இல் நாவுக்கரசர் சிவகதியடைந்தார் என்று கொள்ளலாம். எனவே இவர் பிறந்த ஆண்டு ஏறக்குறைய கி. பி. 569 ஆகும்.1

8. முகம்மது நபி2

திருநாவுக்கரசர் பக்தி நெறியைத் தமிழ்நாட்டிலே பரப்பிய அதே காலத்தில் மற்றொரு பெரியால் இன்னொரு நாட்டிலே ஒரு புதிய மதக் கொள்கையைப் பரப்பிய செய்தியை இங்குக் குறிப்பிட வேண்டியது முறையாகும். ஏனென்றால், அந்தப் புதிய மதம் இப்போது உலக மதங்களில் ஒன்றாகப் பொலிகிறது. நாம் குறிப்பிடுவது முகம்மது நபி என்பவரையும், அவர் உண்டாக்கிய இஸ்லாம் மதத்தையும் ஆகும்.

அரபு நாட்டிலே மெக்கா என்னும் நகரத்திலே அப்துல்லா என்பவர் ஒருவர் இருந்தார். அப்துல்லாவின் மனைவியார் அமீனா என்பவர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை கி. பி. 569 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு முகம்மது என்று பெயரிட்டார்கள். முகம்மது என்னும் குழந்தை வளர்ந்து மணஞ்செய்யும் வயதடைந்தபிறகு கதிஜா என்னும்


1. திருநாவுக்கரசர் கி. பி. 600 முதல் 681 வரையில் உயிர் வாழ்ந்திருந்தார் என்று சிலர் கருதுவது தவறாகும். மகேந்திரவர்மனைத் திருநாவுக்கரசர் சைவனாக மாற்றிய காலத்தில் அவர் வயது முதிர்ந்தவராக இருந்தார் என்று பெரிய புராணத்தினால் அறிகிறோம். அஃதாவது அப்போது நாவுக்கரசருக்கு 50 வயதுக்கு மேலிருக்கவேண்டும். மகேந்திரவர்மன் கி. பி. 630 க்குப் பிறகு வாழவில்லை என்பது சரித்திர ஆசிரியர்களின் முடிபு.

2.அப்பர் கி.பி. 600 இல் பிறந்தவரானால், அவர் தமது 30 ஆவது வயதில் மகேந்திரவர்மனைச் சைவனாக்கியருக்க வேண்டும். ஆனால் இவர் வரலாறு இதற்கு மாறுபட்டதாகத் தெரிகிறது. ஆகவே கி. பி. 600 க்கும் 681 க்கும் இடையில் நாவுக்கரசர் வாழ்ந்திருந்தார் என்று கூறுவது தவறு.