பக்கம் எண் :

248மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

சரித்திர ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். போர்க்களத்திலே புலிகேசி இறந்த பிறகு, அவனுடைய வாதாபி நகரத்தின்மேலே நரசிம்மவர்மன் படையெடுத்துச் சென்றபோது, சமராபிராமனுடைய தகப்பனான பரதுர்க்கமர்த்தனனும் அவனுடன் போய் வாதாபியை அழித்தான் என்பது தெரிகிறது.

இவ்வாறு நரசிம்மவர்மன், மானவர்மன், கொடும்பாளூர் சிற்றரசன் (தந்தை மகன் இருவரும்) ஆகிய மூன்று அரசர்களும் சேர்ந்து புலிகேசியை வென்றார்கள் என்பது தெரிகிறது.

நரசிம்மவர்மனுடைய படைத்தலைவராக இருந்தவர் பரஞ் சோதியார் என்பவர். இவருக்குச் சிறுத்தொண்டர் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவர் நரசிம்மவர்மனுடைய யானைப் படைத்தலைவ ராக இருந்து வாதாபி நகரை வென்றார். இவர் வாதாபி நகரத்தை வென்ற செய்தியைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது:

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரைத் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பூன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனவெண்ணில கவர்ந்தே யிகலரசன் னகொணர்ந்தார்.”

(சிறுதொண்ட நாயனார் புராணம்: 6.)

வாதாபியை (வாதாபி எனினும் வாதாவி எனினும் ஒன்றே.) வென்ற பிறகு சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார் அரச ஊழியத்தைவிட்டு, பக்தியில் ஈடுபட்டு, இவர் காலத்தில் சமயத்தொண்டு செய்துவந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் என்னும் சைவ நாயன்மார்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பெரியபுராணத்தில் கூறப்படுகிற சிறுத் தொண்ட நாயனார் என்பவர் இவரே.

நரசிம்மவர்மன் வாதாபியை வென்றது கி. பி. 642-இல் ஆகும் புலிகேசியைக் கொன்று வாதாபியைக் கைப்பற்றியதனால், மகேந்திரவர்மன் காலத்தில் புலிகேசி கவர்ந்து கொண்ட பல்லவ அரசின் ஆந்திரப் பகுதி, மீண்டும் பல்லவர் வசம் ஆயிற்று என்று கருதலாம். அஃதாவது, நரசிம்மவர்மன் தன் தந்தையார் இழந்த ஆந்திரநாடுகளை மீட்டுக் கொண்டான். ஆனால் மீட்கப்பட்ட அந்நாடுகள் நெடுங்காலம் இவனிடத்தில் இருக்கவில்லை; ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதிகள் மீண்டும் சளுக்கியர் வசம் ஆயின.