பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு259

நாகர் என்பது பல்லவ அரசரைக் குறிக்கும். எப்படி என்றால், பல்லவ அரசர்களின் மூதாதை ஒருவன், நாக அரசன் மகளை மணஞ் செய்துகொண்டு, நாக அரசனிடமிருந்து அரசாட்சி உரிமையைப் பெற்றான் என்று கூறப்படுகிறான். அவன் மரபு நாகர் மரபு எனப்பட்டது. பல்லவர் பாம்பு (நாக) மரபைச் சேர்ந்தவராகையினாலே, பாம்புக் கொடியையும் பெற்றிருந்தனர்.

சூது என்றால் நாகம் என்பது பொருள். வேலூர்ப் பாளைய சாசனம், பல்லவ அரசர் பரம்பரையைக் கூறும் இடத்தில் சூதுபல்லவன் என்னும் அரசன் பெயரைக் கூறுகிறது. மேலும், வீர கூர்ச்சன் என்னும் பல்லவ அரசன் நாக அரசகுமாரியை மணஞ்செய்துகொண்டு நாக அரசனுடைய அரசாட்சி உரிமைகளைக் கவர்ந்து கொண்டான் என்றும் கூறுகிறது.

காஞ்சிபுரத்துப் பரமேச்சுவிண்ணகரத்தை (வைகுண்டபெருமாள் கோயிலை)க் கட்டிய பரமேசுவரவர்மன் என்னும் பல்லவ மன்னனைத் திருமங்கையாழ்வார் பாம்புக் கொடியையுடையவன் என்று கூறுகிறார்.

“தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத்
திசைப்பச் செருமேல் வியந்து அன்றுசென்ற
பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணகர மதுவே.”5

என்று அவர் கூறியது காண்க.

உத்திமேரூரில் உள்ள சுந்தரவரதப்பெருமாள் கோயில் பல்லவ அரசர் கட்டிய மாடக் கோயிலாகும். இக்கோயிலில் துவாரபாலகர் உருவங்கள் முடிதரித்த அரசர் உருவங்கள்போல் இருக்கின்றன. இத் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் உள்ளன. இந்தத் துவாரபால
கரின் கிரீடத்துக்கு மேலே பாம்புப் படம் எடுத்தது போன்ற உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத் துவாரபாலகருக்குச் சூதுராஜன் என்று பெயர் கூறுகிறார்கள். சூது என்பதற்குப் பாம்பு, நாகம் என்னும் பொருள் கூறப்படுகிறது. சூதுராஜன் என்று கூறப்படுகிற இந்தத் துவாரபாலகரின் உருவம், பல்லவ அரசரின் உருவம்போலும். பல்வ அரசன் கட்டிய கோயிலில், நாகப்பாம்புப் படத்துடன் பல்லவ அரசர் உருவம் துவாரபாலகராக அமைக்கப்பட்டிருப்பது பொருத்தமானதுதான்.

எனவே, கொடும்பாளூர் சிற்றரசன் நிருபகேசரி தனது இளமை வயதில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று மூவர் கோயில் சாசனம்