பக்கம் எண் :

258மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

ஆனால், சளுக்கிய நாட்டுக்கும் பல்லவ நாட்டுக்கும் இடையே இருந்ததாக இவர் கூறுகிற சுலியெ என்னும் நாடு, ரேணாட்டைக் குறிக்கிறது என்று சில சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுவர். இவர்கள் கூறுவது பொருத்தமாகவும் சரியாகவும் இருக்கிறது. சுயீலயெ என்பது சோழியர் (சோழர்) என்பதன் மரூஉ. ரேணாட்டையாண்ட அரசர் தம்மைச் சோழர் வழிவந்தவர் என்று கூறிக் கொண்டது கருதத்தக்கது.

கொடும்பாளூர் நாடு

ரேணாட்டுக்குத் தெற்கே திராவிடநாடு இருந்ததென்று ஹியூங்-சுவாங் கூறுகிறார். இவர் கூறுகிற திராவிட தேசம் என்பது தொண்ட மண்டலத்தையும் சோழமண்டலத்தையுங் கொண்டிருந்தது. இதனைப் பல்லவ அரசர் ஆட்சி புரிந்தனர். பல்லவ இராச்சியத்திற்குத் தெற்கே சீனயாத்திரிகர் கூறுகிற மலயநாடு, அஃதாவது பாண்டிய நாடு இருந்தது.

பல்லவ இராச்சியத்துக்கும் பாண்டிய இராச்சியத்துக்கும் இடையிலே கொடும்பாளூர் நாடு என்னும் சிறு நாடு இருந்தது. அது இப்போது புதுக்கோட்டை என்று வழங்குகிறது கொடும்பாளூர் நாட்டின் தலைநகரம் கொடும்பாளூர் என்பது, கொடும்பாளூர் சிற்றரசர்கள் சுயேச்சையரசராக இருந்தனர் என்பது கொடும்பூளூரிலுள்ள மூவர் சூகாவில் சாசனத்தினால் தெரிகிறது.4

சுயேச்சையரசர்களாக இருந்தபோதிலும் இவர்கள் சில சமயங்களில் பல்லவ அரசர்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள்.

மூவர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிற அரசர்களில் நிருப கேசரி, பரதுர்க்கமர்த்தனன், சமராபிராமன் என்னும் அரசர்கள் மூவரும் பல்லவ அரசர்களுக்கு நண்பர்களாக இருந்தார்கள் என்பது இச் சாசனத்தினால் தெரிகிறது.

முதலில் நிருபகேசரி என்னும் அரசனைப்பற்றி ஆராயவேண்டும். ஏனென்றால், மூவர் கோயில் சாசனத்தை இது வரையில் ஆராய்ந்த எல்லா சரித்திர ஆசிரியர்களும் இவனைப்பற்றி ஆராயாமலே விட்டு விட்டார்கள். நிருபகேசரி தனது இளமைப் பருவத்தில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று இந்தச் சாசனம் கூறுகிறது. பாம்புகளோடு வளர்ந்தான் என்றால் பொருள் என்ன? மனிதனாகிய இவன் பாம்பு களுடன் வளர்ந்தான் என்று கூறுவது பொருந்தாது. பாம்பு என்பது நாகம் என்றும் பெயர்பெறும். ஆகவே, பாம்புகளோடு வளர்ந்தான் என்றால் நாகர் என்னும் வகுப்பாருடன் வளர்ந்தான் என்பது கருத்து. அப்படியானால் நாகர் என்பவர் யார்?