பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 257 |
அவனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம் விஷ்ணுவர்த்தனனும் அரசாண்டனர். நரசிம்மவர்ம பல்லவன், மேலைச்சளுக்கிய அரசனான புலிகேசியை வென்று அவனுடைய வாதாபி நகரத்தைக் கைப்பற்றிய போது, இந்தக் கீழைச்சளுக்கிய அரசர்கள் தங்கள் உறவினரான மேலைச் சளுக்கியர்களுக்கு உதவி செய்யவில்லை. மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் தக்கிண தேசத்தின் நிலைமை இது. ரேணாடு ஏழாயிரம் சளுக்கிய இராச்சியத்துக்கும் பல்லவ இராச்சியத்திற்கும் இடையிலே ரேணாடு ஏழாயிரம் என்னும் பெயருள்ள சிறு இராச்சியம் இருந்தது. இது, இப்போது ஆந்திர நாட்டில் அடங்கியுள்ள கடப்பை, கர்நூல் மாவட்டங்களைக் கொண்டிருந்தது. நரசிம்மவர்மன் காலத்தில் இச் சிறு நாட்டை அரசாண்டவன் சோழர் பரம்பரையைச் சேர்ந்த புண்ணிய குமாரன் என்பவன். இவன் சோழ மகாராசன் என்னும் சிறப்புப்பெயர் பெற்றிருந்தான். இவன், தன்னைக் கரிகாற் சோழன் வழிவந்தவன் என்றும் நான்கு தலைமுறையாக இவன் முன்னோர் இந்த ரேணாட்டை யரசாண்டு வருகின்றனர் என்றும் மலெபாடு செப்புப் பட்டயத்தில் கூறிக் கொள்கிறான். கடப்பை மாவட்டத்தைச் சேர்ந்த மதனபல்லிக்கு அருகில் உள்ள சிப்பிலி என்னும் ஊரில் இருக்கிற வீரகல் சாசனம் ஒன்று புண்ணிய குமாரன் என்னும் அரசனைக் கூறுகிறது.3 மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் பாரததேசத்தில் சுற்றுப் பிராயாணம் செய்த ஹியூங்சுவாங் - என்னும் சீனநாட்டு யாத்திரிகர் கி. பி. 640-இல் காஞ்சிபுரத்துக்கு வந்து சிலநாள் தங்கியிருந்தார் என்று முன்னமே கூறினோம். இந்த யாத்திரிகர் எழுதியுள்ள யாத்திரைக் குறிப்பில், சளுக்கிய இராச்சியத்திற்குப் பிறகு சுலியெ என்னும் இராச்சியத்தையும் அதற்குத் தெற்கே திராவிட (பல்லவ) தேசத்தையும் குறிப்பிடுகிறார். திராவிட நாட்டிற்குப் பிறகு, சோழநாட்டைக் குறிப் பிடாமல் மலய (பாண்டிய) நாட்டைக் குறிப்பிடுகிறார். திராவிட (பல்லவ) நாட்டிற்கும் மலய (பாண்டிய) நாட்டிற்கும் இடையே சோழ நாட்டை ஏன் இவர் குறிப்பிடவில்லை என்றால், அந்தக் காலத்தில் சோழநாடு பல்லவ இராச்சியத்துடன் சேர்ந்திருந்தது. சோழ அரசர் பல்லவருக்குக் கீழடங்கிச் சிற்றரசராய் இருந்தனர். |