பக்கம் எண் :

272மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

பாண்டிநாட்டின் தலைநகரத்தில் அசோக சக்கரவர்த்தியின் தம்பியாகிய மகேந்திரன் கட்டிய பௌத்தவிகாரை இருந்ததென்றும் இங்குப் பௌத்தர்கள் சிறுபான்மை யோராகவும் திகம்பரர் (சமணர்) பெரும்பான்மை யோராகவும் இருந்தனர் என்றும் எழுதுகிறார்.

தமிழ்நாட்டில் மட்டும் பௌத்த சமண சமயங்கள் செழித்திருந்தனவென்று கருதவேண்டா; வடநாட்டிலும் இந்த மதங்கள் பெரிதும பரவியிருந்தன. சைவ வைணவ மதங்கள் (இந்துமதங்கள்) குன்றி மறைந்திருந்தன.

தமிழ்நாட்டிலே இந் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நாயன்மார்களும் ஆழ்வார்களும் சமண பௌத்த சமயங்களை அழிக்கச் சமயப்போர் தொடுத்துவிட்டார்கள். இவர்களுக்குக் கிடைத்த தகுந்த வாய்ப்பான ஆயுதம் பக்திக் கொள்கையே. இவர்கள் நாடெங்கும் சென்று, சமண பௌத்த சமயங்கள் பயனற்றவை என்றும், சைவ வைணவ சமயங்கள் சிறந்தவை என்றும் கூறிப் பிரசாரம் செய்தனர். நாயன்மார்கள் சென்று திருப்பதிகம் பாடிய ஊர்களை யெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், அந்த ஊர்களில் அக்காலத்தில் பௌத்தரும் சமணரும் பெரும்பான்மையோராக இருந்ததைக் காணலாம்.

இனி, நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த சைவ அடியார்களும் வைணவ அடியார்களும் யார் யார் என்பதை ஆராய்வோம்.

அடிக்குறிப்புகள்

1.திருஞான சம்பந்தர் - 18.

2.திருஞானசம்பந்தர், 599, 600, 601, 602.