பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு271

“செய்வகை இடையேதப்பும் தென்னவன் பாண்டிநாட்டு
மெய்வகை நெறியில்நில்லா வினைஅமண் சமயம் மிக்குக்
கைவகை முறைமைத்தன்மை கழியமுன் கலங்குங்காலை.”

“தென்னவன் தானும்முன்செய் தீவினைப் பயத்தினாலே
அந்நெறிச் சார்வுதன்னை அறமென நினைந்துநிற்ப
மன்னிய சைவவாய்மை வைதிக வழக்க மாகும்
நன்னெறி திரிந்துமாறி நவைநெறி நடந்ததன்றே.”

“பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகள்எல்லாம்
பாழியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவுமாகிச்

சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு
மூழிநீர் கையிற்பற்றி அமணரே யாகிமொய்ப்ப.”

“பறிமயிர்த் தலையும்பாயும் பீலியும் தடுக்கும்மேனிச்
செறியுமுக் குடையுமாகித் திரிபவர் எங்குமாகி
அறியுமச் சமயநூலின் அளவினில் அடங்கிச்சைவ
நெறியினிற் சித்தஞ்செல்லா நிலைமையில் நிகழுங்காலை.2

பாண்டிநாட்டு ஆனைமலை முதலிய எட்டுக் குன்றுகளிலே சமண முனிவர்கள் வசித்தார்கள் என்று பெரிய புராணமும், ஞானசம்பந்தரின் ஆலவாய்ப் பதிகமும் கூறுகின்றன. இம் மலைகளில் உள்ள சாசனங்களும் இதற்குச் சான்றாக இருக்கின்றன. இதற்கு ஒப்பவே, நரசிம்மவர்மன் காலத்தில் (கி.பி. 640 இல்) தமிழ் நாட்டிற்கு வந்த ஹியூங் சுவாங் என்னும் சீனநாட்டுப் பௌத்த யாத்திரிகரின் யாத்திரைக் குறிப்பும் கூறுகிறது. காஞ்சிபுரத்தில் 100 க்கு மேற்பட்ட பௌத்தப்பள்ளிகள் இருந்தன என்றும், அவற்றில் 1000 க்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் இருந்தனர் என்றும் கூறுகிறார். 80 க்கு மேற்பட்ட ஆலயங்கள் இருந்தன என்றும் அவைகளில் பெரும்பாலும் திகம்பரர்களுக்கு (சமணர்களுக்கு) உரியது என்றும் எழுதுகிறார். இங்கு அசோக சக்கரவர்த்தியாற் கட்டப்பட்ட ஒரு பௌத்தப்பள்ளி இருந்ததையுங் கூறுகிறார். இலங்கைத் தீவிலிருந்து 300 பௌத்த பிக்குகள் காஞ்சிபுரத்திற்கு வந்ததையும் அவர்களுடன் இந்த யாத்திரிகர் உரையாடியதையும் குறிப்பிடுகிறார்.