பக்கம் எண் :

  :

2. வேறு அரசர்கள்

வடநாட்டரசர்

விஜயாதித்தியன்

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் நந்திவர்மன் காலத்தில் பல்லவ நாட்டிற்கு வடக்கே இருந்த அரசர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

அக்காலத்தில் கீழைச் சாளுக்கிய இராச்சியத்தை அரசாண்டவன் விஜயாதித்தியன் (இரண்டாவன்). இவன் வெங்கியைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்டான். இவன், இராஷ்டிரகூட அரசர்களின் கீழடங்கி இருந்தான். கி. பி. 847-இல் காலமானான். இவனுக்குப் பிறகு இவன் மகன் விஷ்ணுவர்த்தனன் (ஐந்தாவன்) அரசனானான். இவன் நெடுங்காலம் அரசாளவில்லை. கி. பி. 848-இல் காலமானான்.

பிறகு, இவன் மகன் விஜயாதித்தியன் (மூன்றாமவன்) அரசாட் சியை ஏற்றான். இவனுடைய அமைச்சன் வினயாதி சர்மன் என்பவன். இவனுடைய சேனைத் தலைவர்கள் கடெயராசன் என்பவனும் அவன் மகனான பாண்டரங்கனும் ஆவர். இவர்களைக் கொண்டு இவன் பல போர்களை வென்றான். பல்லவ அரசருக்கு உரியதாக இருந்த நெல்லூரை (நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது) இவன் கைப்பற்றிக் கொண்டான். கங்க அரசனை வென்றான்.

இராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷனுக்குப் பிறகு அரசாண்ட கிருஷ்ணன் (இரண்டாவன்) என்பவனையும் அவனுக்கு உதவியாக இருந்த காலசூரி அரசன் சங்கிலன் (சங்குவன்) என்பவனையும் கிரணபுரத்தில் வென்றான். இராஷ்டிரகூட தேசத்து அசலபுரத்தையும் சக்கர கூட நகரத்தையும் கெளுத்தி எரித்தான். இவ்வாறு இராஷ்டிரகூட அரசனை வென்று அவனுடைய தலைமையிலிருந்து விலகிச் சுதந்தரனாக் அரசாண்டான் விஜயாதித்தியன்.