| 328 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2 |
இருந்தார்கள். முத்தரையர் பல்லவருக்குக் கீழடங்கி யிருந்தபோதிலும், பாண்டியர் அவரை வென்ற காலத்தில், பாண்டியருக்குக் கீழடங்கி யிருந்தார்கள். முத்தரைய அரசர் பரம்பரையில் பேர் பெற்ற சில அரசர் இருந்தார்கள். அவர்களுடைய சாசனங்கள் சில செந்தலை, நாரதத்தமலை, சிவலப்பேரி, திருமய்யம், குன்னாண்டார் கோயில் முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இருந்த முத்தரையன் சாத்தன் பழியிலி என்பவன். இவன், விடேல் விடுகு முத்தரையனுடைய மகன். சாத்தன் பழியிலி, நார்த்த மலையில் பாறையைக் குடைந்து ஒரு குகைக் கோயிலை அமைத்தான். இவனுக்குச் சிறிய நங்கை என்னும் பெயருள்ள மகள் ஒருத்தியிருந்தாள். இவள், மீனவன் தமிழதிரையன் என்னும் சிறப்புப் பெயருடைய மல்லன் அநந்தன் என்பவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.3 
சாத்தம் பழியிலியின் சாசன எழுத்து. “விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தம் பழியிலி” என்பது இதன் வாசகம். சோழ அரசர் அக்காலத்தில் சோழநாடு பல்லவ அரசுக்குக் கீழ்ப்பட்டிருந்தது. சோழ அரச குடும்பத்தார் உறையூர், திருவாரூர், பழையாறை முதலிய இடங்களில் பல்லவ அரசருக்குக் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்தார்கள். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த சோழ அரசன் குமாராங்குசன் என்பவன். இவனைப்பற்றி நந்திவர்மனுடைய வேலூர்பாளைய சாசனம் இவ்வாறு கூறுகிறது. “தன்னுடைய வீரத்தினாலே விளங்கப்பட்டவனும் தன்னுடைய ஈகையினாலே கர்ணனுக்குச் சமானமானவனும் நல்ல ஒழுக்கமுடை யவனும் வீரமிக்க சோழ குலத்துக்குச் சூளாமணி போன்றவனுமான் குமாரராங்குசன்” என்றும், “சோழ மகாராசன்” என்றும் கூறுகிறது. |