பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு327

நந்திவர்மன் பல்லவ மல்லன் காலத்தில், பல்லவ இராச்சியத்தின் வடக்கிலிருந்த இராஷ்டிரகூட அரசனும் கீழைச் சாளுக்கிய அரசனும் தங்களுக்குள் போர்செய்து கொண்டிருந்தபடியினாலே அவர்களுக் கும் பல்லவனுக்கும் அடிக்கடி போர் நிகழவில்லை. ஆனால், அவன் பேரனான தெள்ளாறெறிந்த நந்திவர்மன், இராஷ்டிரகூட அரசனுடன் போர்செய்ய நேரிட்டது. அவன் குறுகோடு என்னும் இடத்தில் செய்த போரை நந்திக் கலம்பகம் கூறுகிறது. குறுகோட்டைப் போரைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம்.

தென்னாட்டரசர்

முத்தரையர்

பல்லவ இராச்சியத்துக்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் முத்தரையர் என்னும் சிற்றரசர் அரசாண்டனர். முத்தரையரை முத்தரசர் என்றும் கூறுவர். முத்தரையர் ஆண்ட நாடு, இப்போதைய தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களில் அடங்கி இருந்தது. முத்தரையரின் தலைநகரம் தஞ்சாவூர்.

முத்தரையரை நாலடியார் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

“பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்”1

என்றும்,

“நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்”2

என்றும் கூறுகிறது.

முத்தரையரைச் சிலர், பாண்டிய அரசரின் குலத்தவர் என்று கூறுகிறார்கள். இது தவறு என்று தோன்றுகிறது. முத்தரையர் களபர அரசரின் வழியினர் போலத் தோன்றுகின்றனர்.

முத்தரையர், பல்லவ அரசருக்குக் கீழடங்கியிருந்தனர். பாண்டியர், பல்லவ இராச்சியத்தின் மேல் படையெடுத்து வந்தால், அவரை எதிர்த்துத் தடுப்பதற்காக முத்தரையர் பல்லவருக்கு உதவியாக