பக்கம் எண் :

326மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

வர்ஷனுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தன. கடைசியில் மாளவ தேசத்தைப் பிரதிஹார அரசன் கைப்பற்றிக் கொண்டான்.

அங்கம், வங்கம், மகதம் என்னும் தேசங்களை அமோகவர்ஷன் கைப்பற்ற முயன்றான். இந்தத் தேசங்கள் பால அரசர்களுக்குரியதாக இருந்தன. ஆகவே, இவன் பால அரசனான தேவபாலனுடன் போர் செய்தான் என்று தெரிகிறது. குஜராத்தை அரசாண்ட சாமந்த அரசனான கர்க்கன்(அமோகவர்ஷனின் உறவினன்) கி. பி. 830-இல் காலமானான். அவனுக்குப் பிறகு, அவன் மகன் துருவன் (முதலாவன்) அரசனானான். துருவனுக்கும் அமோக வர்ஷனுக்கும் எக்காரணத்தினாலோ பகை மூண்டது. 845-இல் துருவன் கொல்லப்பட்டிறந்தான். துருவன் மகன் அகால வர்ஷன், அமோகவர்ஷனுடன் போராடினான். அகால வர்ஷன் இறந்த பிறகு அவன் மகன் துருவன் (இரண்டாவன்) ஆட்சிக்கு வந்தான்.

அந்தச் சமயத்தில் கூர்ஜ்ஜர பிரதிஹார அரசனாகிய போஜன் என்பவன் இராஷ்டிரகூட தேசத்தின்மேல் படையெடுத்துவர முயற்சி செய்தான். இதையறிந்த துருவனும் அமோகவர்ஷனும் தம்மில் போர் செய்வதை நிறுத்திக் கொண்டு இருவரும் சேர்ந்து பிரதிஹார அரசன் போஜனை எதிர்க்க ஆயத்தமாக இருந்தனர். இவ்வாறு இவர்க ளுடைய போர் கி. பி. 860-இல் சமாதானமாக முடிந்தது. எதிர் பார்த்த படி, போஜன் இவர்கள்மேல் படையெடுத்து வரவில்லை.

அமோகவர்ஷன் புலவர்களை ஆதரித்தான். கன்னட மொழிப் புலவர்களான ஆதிபுராணம் இயற்றிய ஜினசேனரும், கணித சாரார்த்தத சங்கிரகம் எழுதிய மகா வீராசாரியாரும், அமோக விருத்தியை இயற்றின சாகடாயனரும் இவ்வரசன் காலத்திலிருந்த புலவர்கள், அமோகவர்ஷன், கன்னடச் செய்யுள் இலக்கண நூலாகிய கவிராஜ மார்க்கம் என்னும் நூலை இயற்றினான். அமோகவர்ஷனுக்கு நிருபதுங்கன், மகாராஜ ஷண்டன், வீரநாராயணன், அதிசயதவ்லன் என்னும் சிறப்புப் பெயர்கள் உண்டு.