பக்கம் எண் :

366மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

பூவை மோந்ததற்காகக் கோபங்கொண்டு, அரசியாரின் மூக்கைக் கத்தியினால் அரிந்தார். இவ்வாறு, சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தியுடையவராக இருந்து கடைசியில் சிவகதியடைந்தார்.

விறன்மிண்ட நாயனார்

இவர் மலைநாட்டிலே செங்குன்றூரில் இருந்தவர். சிவபக்தியும் சிவனடியார் பக்தியும் உடையவர். அவர் திருக்கோயில்களுக்குப் போகும்போது முதலில் சிவனடியார்களை வணங்கிப் பிறகு சிவபெருமானை வணங்கும் இயல்புள்ளவர். இவர் பிற்காலத்தில், திருவாரூரில் சென்று அங்குத் தங்கியிருந்தார்.

திருவாரூரில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஒரு நாள் கோயி லுக்குச் சென்றபோது, அங்கிருந்த சிவனடியார்களை வணங்காமல் கோயிலுக்குள் சென்றார். அப்போது அவர்களுடன் இருந்த விறன் மிண்டர், “அடியார்களை வணங்காமல் போகிற வன்தொண்டன் அடியார்களுக்கு வேறுபட்டவன்” என்று கூறினார். அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார், அவருடைய அடியார் பக்தியை வியந்தார். உடனே, திருத்தொண்டத்தொகை என்னும் பதிகத்தைப் பாடினார். இவர் பாடிய திருத்தொண்டத்தொகை, பிற்காலத்தில் திருத்தொண்டர் புராணம் பாடுவதற்கு முதல் நூலாக இருந்தது.

சுந்தரர், திருத்தொண்டத் தொகையில், “விரிபொழில் சூழ் குன்றை யார் விறன்மிண்டர்க் கடியேன்” என்று விறன்மிண்டரைக் கூறினார்.

விறண்மிண்ட நாயனாரைப் பற்றி வேறு சில கதைகள் வழங்கப்படுகின்றன. அக்கதைகள் பெரியபுராணத்தில் கூறப்படவில்லை.

வரகுண பாண்டியன்

வரகுண பாண்டியன், நந்திவர்மன் காலத்தில், பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற அரசனாக இருந்ததோடு, சிறந்த சிவபக்தனாகவும் இருந்தான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வரசனைத் தமது திருத் தொண்டத்தொகையில் கூறாமற் போயினும், வேறு பதிகத்தில் கூறி யுள்ளார். வரகுண பாண்டியனுக்கு மாறன் சடையன் என்னும் பெயரும் உண்டு. இப்பெயரைச் சுந்தரர், திருவதிகைத் திருவீரட்டானப் பதிகத்தில் (8) பொடியாடும் திருமேனி நெடுமாறன் என்று கூறுகிறார். இந்த நெடு