பக்கம் எண் :

410மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

பாண்டியன் அறிவுடைநம்பி

இவனை நேரில் கண்டு பாடிய புலவர் ‘அறிவுடைவேந்தன்’ என்னும் தொடரைப் பொதுப்படையாகக் குறிப்பிடுகிறார்.143 இதனால் இவனை அறிவுடைநம்பி என்று குறித்தார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. இவனது பாடல்கள் இன்பப் பயனை விளக்குவன வாக உள்ளன. நம்பி என்னும் பெயர், முறுக்கான உடற்கட்டுக் கொண்டு அழகுடன் பொலிவும் ஆடவர்க்கெல்லாம் வழங்கப்பெற்ற பொதுப் பெயர் ஆகும்.

இவன் அரியணையில் அமர்வதற்குமுன் அரசியல் அலுவலர்கள் குடிமக்களின் நிலையைப் பார்த்து மிகுதியான வரிகளை வசூலித்த தாகத் தெரிகிறது. புலவர் இவனை நேரில் கண்டு சிறிது சிறிதாகப் பல தவணைகளில் மக்கள் வரிகளைச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்தினார்.144 அரசன், புலவரின் அறிவுரையை ஏற்று மக்களின் விருப்பம்போல் பல தவணைகளில் வரி செலுத்த அனுமதித்தான் எனலாம். வாழ்க்கையில் பலவகையான செல்வ வளங்களும் ஒருங்கமையப் பெற்றிருந்தாலும் மக்கட்செல்வம் இல்லாவிட்டால் இன்பம் அமையாது என்று இவன் தன்னுடைய பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளான்.145

சங்கப்பாடல் தொகுதிகளில் இவனுடைய பாடல்களாக அகத் துறைப் பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. தினைப் புனம் காக்கச் சென்ற பெண் ஒருத்தி அதனை மறந்து அவளது காதலனோடு கூட மகிழ்ந்தே காலம் போக்குவதை அவளது தோழி பக்குவமாகத் தவறு என்று அறிவுறுத்தும் வகையில் ஒரு பாடல் அமைந்துள்ளது.146 காதலன் ஒருவன் அடிக்கடி காதலியிடம் கள்ளத் தொடர்பு கொள்வதைத் தோழி வன்மையாகக் கண்டிப்பதாய் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.147

கற்பரசி ஒருத்தியின் கையில் இருந்த குழந்தையைப் பேய் ஒன்று பிடுங்கிக் கொண்டது போலத் தோழியிடமிருந்து தலைவியைத் தலைவன் பிடுங்கிக் கொண்டான் என்றும், பூப்போன்ற அவளைத் தேனீப் போன்று நலம்நுகர்ந்து சென்றனான் என்றும் நயம்படப் பாடிய பாடல் ஒன்றும் கிடைத்துள்ளது.148 நம்பி நெடுஞ்செழியன் எனும் பெயர் கொண்ட அரசன் ஒருவன் மிகச் சிறந்த போர்த்திறம் படைத்த அரசனாக விளங்கியதை நெடுஞ்செழியன் வரலாற்றில் காணலாம் இந்தப் பெயர் நம்பியின் மகன் நெடுஞ்செழியன் என்பதாக இருக்கக்கூடும்.