பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு471

இந்தப் பழங்குடி மக்களைப்பற்றிய இலங்கை வரலாற்றைத் தீபவம்சம், மகாவம்சம் என்னும் நூல்கள் கூறுகின்றன. இந்த நூல்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் வாழ்ந்த புத்தர் பெருமான். இலங்கைக்கு மூன்று முறை வந்தார் என்றும், முதல் முறை வந்தபோது அவர் இயக்கரை இலங்கைத் தீவிலிருந்து வெளியேற்றினார் என்றும், இரண்டாம் முறை. மூன்றாம் முறை வந்தபோது அவர் நாகர் என்னும் இனத்தாருக்குப் பௌத்த மதத்தைப் போதித்துச் சென்றார் என்றும் கூறுகின்றன. ஆனால், புத்தர் பெருமான் வடஇந்தியாவிலேயே தம்முடைய வாழ்நாள் முழுவதையும் கழித்தார் என்றும் தென்னிந்தியாவுக்கோ, இலங்கைக்கோ, வேறு நாடுகளுக்கோ அவர் போகவில்லை என்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு கூறுகிறது. ஆனால், புத்தரை இலங்கையோடு சம்பந்தப்படுத்த வேண்டும் என்னும் ஆசையினாலே, தீபவம்சமும் மகாவம்சமும் புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்துபோனார் என்று கூறுகின்றன.

புத்தர் பெருமான் போதிஞானம் அடைந்தபிறகு ஒன்பதாவது திங்களில் இலங்கைக்கு வந்தார் என்றும், அப்போது இலங்கையில் வாழ்ந்திருந்த இயக்கர் ஆற்றங்கரையிலே இருந்த மகாநாகத் தோட்டத்திலே வழக்கம்போலக் கூடியிருந்ததைக் கண்டு அவர், அவர்களை அச்சுறுத்த எண்ணிக் காரிருளையும் புயற்காற்றையும் பெருமழையையும் உண்டாக்க, அவர்கள் அஞ்சி நடுங்கித் தங்களை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்றவேண்டும் என்று புத்தரை வேண்டிக்கொள்ள, அவர் தமக்கு இருக்கச் சிறிதளவு இடந்தந்தால் அந்தத் துன்பத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதாகக் கூற, அவர்கள் அவருக்குத் தம் நாட்டில் இருக்க இடந்தந்தனர் என்றும், இடம்பெற்ற புத்தர் புயலையும் மழையையும் அகற்றிக் கீழே இறங்கிவந்து தம்முடைய தோல் ஆசனத்தை விரித்து அதில் அமர்ந்தபோது, அது அகன்று விரிந்து கொண்டு போக, இயக்கர் ஒதுங்கிச் சென்று கடற்கரையில் நின்றனர் என்றும், அப்போது புத்தர் அருகில் கடலில் இருந்த கிரித் நீவு என்னும் தீவைத் தம்முடைய இரித்தி (சித்தி)யினால் இலங்கைக்கு அருகில் வரவழைக்க. இயக்கர் அந்த கிரித் தீவில் சென்றுவிட அவர் அத் தீவை முன்போலக் கடலிலிருந்து அகன்று போய்விடச் செய்தார் என்றும் இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு, புத்தர் இலங்கையிலிருந்து இயக்கரை வேறு தீவுக்கு அனுப்பிவிட்டார் என்று கூறுகின்றன.17