பக்கம் எண் :

470மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

மாதிட்டை என்னும் பழைய பெயர் காலப்போக்கில் மாதோட்டம் என்றாகி, பிறகு அது மாந்தோட்டம் என்று மாறிக் கடைசியில் மாந்தை என்றும் வழங்கப்பட்டது. சங்ககாலத்தில் சேரநாட்டுத் துறைமுகமாயிருந்த மாந்தைப் பட்டினத்தை இந்த மாந்தை என்று கருதுவது தவறு. சேரநாட்டு மாந்தைத் துறைமுகத்தைக் `குட்டுவன் மாந்தை’ என்று சங்கநூல்கள் கூறுகின்றன. சங்கநூல்களில் கூறப்படுவது சேரநாட்டு மாந்தைத் துறை முகத்தையே; திரு. நவரத்தினம் அவர்கள் மாதோட்டத்தை, (மகாதிட்டையை) மாந்தை என்று சங்கநூல்கள் கூறுவதாகக் கருதிக்கொண்டு தவறாக எழுதியுள்ளார்.

சங்ககாலத்திலும் அதற்கு அடுத்த காலத்திலும் மாதிட்டைக்கு மாந்தை என்று பெயர் இருக்கவில்லை. இப்பெயர் மிக மிகப் பிற்காலத்தில்தான் அங்கு வழங்கப்பட்டது. எனவே, சேரநாட்டில் இருந்த மாந்தைப் பட்டினத்தை இலங்கையில் சங்க காலத்தில் இருந்த மாதிட்டைத் துறைமுகத்துடன் இணைப்பது தவறாகும்.

மாவலி கங்கை

மாவலி கங்கை இலங்கையில் உள்ள பெரிய ஆறாகும். இலங்கையின் மத்தியில் உள்ள மலையநாட்டில் (கண்டிமலைப் பிரதேசங்களில்) இது உற்பத்தியாகிக் கிழக்காகப் பாய்ந்து பிறகு வடகிழக்காக ஓடிக் கடைசியில் வங்காளக் குடாக்கடலில் உள்ள திருக்கோண மலைக்கு அருகில் கடலில் சேர்கிறது. மாவில கங்கையின் சரியான பெயர் மகாவாலுக கங்கை என்பது. (மகா = பெரிய, வாலுகம் = மாணல், கங்கை = ஆறு. எனவே, `பெருமணல் ஆறு’ என்பது இதற்குப் பொருள்.) மகாவாலுக கங்கை என்னும் பெயர் சுருங்கி மாவலி கங்கை என்று வழங்கப்படுகிறது. மாவலி கங்கை இலங்கையை வடக்குப்பகுதி என்றும், தெற்குப் பகுதி என்றும் இரு கூறாகப் பிரிக்கிறது. சிங்கள இராச்சியத்தின் (இராசாட்டத்தின்) தெற்கு எல்லையாக இந்த ஆறு இருந்தது. இந்த ஆற்றின் தெற்கே மலைய நாடும். உரோகண நாடும் இருந்தன. இந்த நாடுகள் சிங்கள ஆட்சிக்கு அடங்காமல் இருந்தன.

இலங்கையின் பழங்குடி மக்கள்

இலங்கையில் ஆதிகால முதல் நிலையாகத் தங்கி வாழ்ந்தவர்கள் இயக்கர். நாகர், வேடர் என்னும் பழங்குடி மக்களாவர்.