பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு469

கப்பல்கள் தங்குவதற்கு வாய்ப்பான துறைமுகமாக இருந்தது. ஆனால், அது வாணிகப் பண்டங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் துறைமுகமாக அமைந்திருக்கவில்லை.

மாதிட்டை

இலங்கையின் மேற்குக் கரையில் மன்னார்குடாக்கடலில், பாண்டி நாட்க்கு எதிர்க்கரையில் இருந்தபேர்பெற்ற பழைய துறைமுகம் இது. மகாதிட்டை என்பது மாதிட்டை என்று மருவி வழங்கிற்று. பிற்காலத்தில் இந்தப் பட்டினம் மாதோட்டம் என்று கூறப்பட்டது. இது மாந்தை என்றும் வழங்கப்பட்டது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட முதல் சிங்கள அரசனான விசயன் பாண்டியனுடைய மகளை மணஞ் செய்துகொண்டான். அவனுடைய 700 தோழர்களும் பாண்டி நாட்டு மகளிரை மணஞ்செய்து கொண்டார்கள். பாண்டியன் மகளும், பாண்டிநாட்டு மணமகளிரும் பரிவாரங்களோடு இலங்கைக்கு வந்தபோது மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள்.13

கி.மு. முதல் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட ஏலார அரசன்மேல் துட்டகமுனு போர் செய்தபோது, ஏலாரனுக்கு உதவி செய்யப் பல்லுகன் என்பவன் சோழ நாட்டிலிருந்து சேனையை அழைத்துக்கொண்டு மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினான்.14 வட்டகாமணி அரசனுடைய ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஏழு வீரர்கள் கி.மு. 29 இல் தங்கள் சேனைகளோடு மாதிட்டைத் துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள்.15 கி.பி. முதல் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட இளநாகனை. இலம்பகன்னர் அரசைவிட்டு ஓட்டியபோது. அவன் மகாதிட்டைத் துறைமுகத்தில் கப்பல்ஏறித் தமிழ்நாட்டுக்கு வந்து புகல் அடைந்தான்.16

தமிழ்நாட்டிலிருந்து வாணிகத்துக்காகவும் பிற அலுவல் காரணமாகவும் இலங்கைக்குச் சென்றவர்கள் மாதிட்டைத் துறை முகத்தில் இறங்கிச் சென்றார்கள். அவ்வாறே இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களும் இந்தத் துறைமுகத்தில் வந்து கப்பல் ஏறினார்கள். (அந்த காலத்தில் இப்போது உள்ள கொழும்புத் துறைமுகம் இல்லை. கொழும்புத் துறைமுகம் மிகப் பிற்காலத்தில் ஐரோப்பியர் வந்து வாணிகஞ் செய்யத் தொடங்கிய போது புதிதாக ஏற்பட்டது).