பக்கம் எண் :

468மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

(கிழக்கிந்தியத் தீவுகளுக்கு) போன வணிகக் கப்பல்கள் மணிபல்லவத் துறையில் தங்கி அங்கிருந்து கடல் பிரயாணத்துக்கு வேண்டிய குடிநீரை எடுத்துக் கொண்டு போயின. மணிமேகலைக் காவியத்தில் இந்தத் துறைமுகம் சிறப்பாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் பழைய தலைநகரமாயிருந்த அநுராதபுரத்துக்கு நெடுஞ்சாலையொன்று மணிபல்லவத் துறையிலிருந்து சென்றது. இலங்கையை அரசாண்ட தேவனாம்பிய திஸ்ஸன் (கி.மு. 247-207), அக்காலத்தில் இந்திய தேசத்தை அரசாண்ட அசோகச் சக்கர வர்த்தியிடம் தூதுக்குழுவை அனுப்பியபோது, அந்தத் தூதுக்குழு சம்புகொலத் (மணிபல்லவத்) துறையிலிருந்து கப்பலேறிச் சென்றது.5 அந்தத் தூதுக்குழு மீண்டும் திரும்பி வந்தபோது இந்தத் துறை முகத்தில் வந்து இறங்கி அநுராதபுரத்துக்குச் சென்றது.6

அசோகச் சக்கரவர்த்தி, சங்கமித்திரையின் தலைமையில் மகாபோதிக் கிளையை இலங்கைக்கு அனுப்பியபோது அந்தக் கப்பல் இந்தத் துறைமுகத்தில் வந்து இறங்கிற்று.7 போதிமரக் கிளையுடன் அனுப்பப்பட்ட எட்டுப் போதிமரக் கன்றுகளில் ஒரு கன்றைத் தேவனாம்பிய திஸ்ஸன் இங்கு நட்டான்.8 பிறகு இந்தபோதி மரத்தின் அடியில் புத்தருக்குப் பாதபீடிகை அமைக்கப்பட்டது. இந்தப் பீடிகைக்கு மணிபல்லங்கம் (பல்லங்கம் - பலகை என்று பெயர். மணிபல்லங்கம் என்னும் பெயர் தமிழில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கியது. இந்தப் பீடிகையை மணிமேகலைக் காப்பியம் `மணிபீடிகை’ என்றும் `தரும பீடிகை’ என்றும் கூறுகிறது.

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்திலிருந்து தெற்கே முப்பது யோசனை தூரத்தில் மணிபல்லவத் துறை இருந்தது.9 கோவலன் மகள் மணிமேகலை பௌத்த சமயத்தை சேர்ந்த பிறகு மணி பல்லவஞ் சென்று அங்கிருந்த புத்த பாதபீடிகையை வணங்கித் திரும்பி வந்தாள்.10

யாழ்ப்பாண நாட்டை (நாக நாட்டை) அக்காலத்தில் அரசாண்ட வளைவணன் என்ற நாக அரசனுடைய மகளான பீலிவளை, மணிபல்லவத் துறையிலிருந்து கப்பல் ஏறிக் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்த நெய்தலங்கானலில் சில நாள் தங்கியிருந்தாள்.11 மணிமேகலை சாவகநாடு சென்று அந்நாட்டுஅரசன் புண்ணியராசனோடு மணிபல்வத்துக்கு வந்து அங்கிருந்த பாத பீடிகையை வணங்கினாள்.12 மணிபல்லவத் துறைமுகம், சங்க காலத்திலும் அதற்குப் பிறகும்