பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு467

நிலையாகத்தங்கியிருந்த அவர்கள் பாண்டியரோடு தொடர்பு இல்லாமலே தனித்து இருந்தனர். அவர்கள் பிற்காலத்தில்பௌத்த மதத்தைத் தழுவியிருந்தனர். அவர்களிடம் தேவனாம்பிய திஸ்ஸனின் தம்பியான மகாநாகன் அடைக்கலம் புகுந்து உரோகண நாட்டில் தங்கியிருந்தான். பிறகு, அவனும் அவனுடைய மகனும் மச்ச மகாராசரை அழித்து அவர்களுடைய உரோகணநாட்டை கைப்பற்றிக் கொண்டார்கள். இவ்வாறு உரோகண நாட்டை அரசாண்ட மச்சமகாராசர் அழிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அக்காலத்தில் கற்பாறைகளில் எழுதிவைத்துள்ள பிராமி எழுத்துச் சாசனங்களும்அச் சாசனங்களோடு பொறிக்கப்பட்டுள்ள மீன் அடையாளங்களும் அவர்களைப்பற்றிக் கூறுகின்றன.

சமந்தம்

இது இலங்கையின் நடுவில் உள்ள மலையநாட்டில் மிக உயரமான மலை. இது `சமனொளி மலை’ என்றும் `சமந்த கூடம்’ என்றும்கூறப்பட்டது. இந்த மலையின் உச்சியில் புத்தருடைய அடிச்சுவடு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, பௌத்தர்கள் இந்த மலையைப் புனிதமாகக் கருதி அங்கு யாத்திரை போகிறார்கள். மணிமேகலைக் காவியமும் இந்த மலையைக் கூறுகிறது. `இரத்தின தீவத்து ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை’ புத்தருடைய பாதச்சுவடு இருப்பதாகக் கூறுகிறது.3 `இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பு’ எனவும் கூறுகிறது.4

பிற்காலத்தில் இங்கு வந்தமுகமதியர்களும், கிறித்தவர்களும் இந்த மலையை `ஆதம் மலை’ என்று கூறினார்கள்.

மணிபல்லவம் ( சம்பு கொலப்பட்டினம்)

தமிழில் மணிபல்லவம் என்றும், சிங்கல மொழியில் சம்புகொலப் பட்டினம் என்றும் பெயர்பெற்ற இந்தத் துறைமுகம் மிகப் பழைமையானது. இது இலங்கையின் வடகோடியில் நாகநாட்டின் (இப்போதைய யாழ்ப்பாணத்தின்) வடக்கே இருந்தது. சம்பில் துறை என்றும் இது கூறப்பட்டது. இங்குப் பெரிய பட்டினம் (ஊர்) இல்லை. இங்கு ஏற்றுமதி, இறக்குமதிகள் நடைபெறவில்லை. ஆனால், தமிழருக்கு முக்கியத் துறைமுகமாக இருந்தது. சோழ நாடு, பாண்டிய நாடுகளிலிருந்து தூரக்கிழக்கு நாடாகிய சாவக நாட்டுக்குப்